தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழிப்புணர்வு பேரணி


தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழிப்புணர்வு பேரணி
x

தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கரூர்

தமிழ் ஆட்சி மொழி சட்டம் இயற்றப்பட்ட நாளை நினைவு கூரும் வகையில் ஆட்சி மொழி சட்ட வாரம் நேற்று முதல் வருகிற 28-ந் தேதி வரை ஒரு வார காலத்திற்கு கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசு அலுவலர்கள், பணியாளர்கள், தமிழ் அமைப்புகள், தமிழ் அறிஞர்கள், கல்லூரி மாணவ-மாணவிகளுடன் தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேற்று கொடியசைத்து தொடக்கி வைத்தார். இப்பேரணி தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரியில் இருந்து தொடங்கி பெருமாள் கோவில் வரை சென்று பிறகு மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது. பேரணியில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு எங்கும் தமிழ், எதிலும் தமிழ் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகையை ஏந்தி தமிழ் வாழ்க என கோஷமிட்டவாறு சென்றனர். முன்னதாக அரசு இசைப்பள்ளியின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து தமிழை கலப்பு இல்லாமல் முழுமையாக பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், உதவி இயக்குனர் (தமிழ் வளர்ச்சி) ஜோதி, அரசு கலைக்கல்லூரி முதல்வர் கவுசல்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story