"தமிழக கவர்னரை பதவியில் இருந்து நீக்க வேண்டும்"- வைகோ பேட்டி


தமிழக கவர்னரை பதவியில் இருந்து நீக்க வேண்டும்- வைகோ பேட்டி
x

“ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவாரின் கருவியாக செயல்படும் தமிழக கவர்னரை பதவியில் இருந்து நீக்க வேண்டும்” என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

திருநெல்வேலி

"ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவாரின் கருவியாக செயல்படும் தமிழக கவர்னரை பதவியில் இருந்து நீக்க வேண்டும்" என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

இதுகுறித்து அவர் நெல்லையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

அபாண்டமான பொய்

தமிழக கவர்னர் சட்டமன்றத்தில் நடந்து கொண்ட முறை, இதுவரை எந்த மாநிலத்திலும் நடைபெறாத ஒன்றாகும். தமிழ்நாடு அரசின் கொள்கைகள், சாதனைகளை மக்களுக்கு அறிவிக்கும் உரைதான் கவர்னர் உரை. ஆனால், அதனை வாசிக்காமல் அவராகவே சிலவற்றை சேர்த்து வாசித்து விட்டு அந்த உரைக்கு ஏற்கனவே மறுப்பு தெரிவித்ததாக அபாண்டமான பொய்யை கூறுகின்றனர்.

மகாகவி பாரதியாரே செந்தமிழ் நாடு என்றுதான் சொல்லி இருக்கிறார். தமிழ்நாடு என்று பெயர் வர சங்கரலிங்கனார் உயிரை மாய்த்தார். அண்ணா சட்டமன்றத்தில் தமிழ்நாடு என்ற பெயரை அறிவித்தார். மேலும் அண்ணா கடைசியாக 1969-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ந்தேதி அன்று கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேசும்போது எதிர்காலத்தில் யாராலும் தமிழ்நாடு என்ற பெயரை மாற்ற முடியாது என்று கூறினார். எனவே கவர்னரை பதவியில் இருந்து நீக்க வேண்டும், இல்லையெனில் மத்திய அரசும் கவர்னரின் செயலுக்கு உடந்தையாக இருக்கிறது என்றுதான் அர்த்தம்.

ஆன்லைன் ரம்மி

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டுமென்று பலர் கூறுகின்றனர். 40 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். நெல்லை பணகுடியிலும் ஆன்லைன் ரம்மியால் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆனால் அதனை தடை செய்யும் மசோதாவில் கவர்னர் கையெழுத்து போடாமல் ஆன்லைன் ரம்மி நடத்துபவர்களை தனது மாளிகைக்கு அழைத்து தேனீர் விருந்து கொடுக்கிறார்.

சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மிக பண்பாக நடந்து கொண்டார். ஆனால் அதை மதிக்காமல் கவர்னர் நாட்டுப்பண் முடிவதற்கு முன்பே அவையிலிருந்து வெளியேறினார். ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவாரின் கருவியாக கவர்னர் செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

சேது சமுத்திர திட்டம்

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது சேது சமுத்திர திட்டத்தை அறிவிக்க வைத்தேன். ஆனால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது அந்த திட்டத்தை செயல்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருகிறார் என்றால் அதைவிட தித்திப்பான செய்தி எதுவும் இல்லை. எனவே முதல்-அமைச்சரை மனதார பாராட்டுகிறேன்.

கவர்னரை மாற்றக்கோரி தமிழக பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்திருப்பதால் நியாயம் கிடைக்குமா? என்பது தெரியவில்லை. கவர்னரை மத்திய அரசு இயக்கி கொண்டிருக்கும் காலகட்டத்தில் நியாயம் கிடைக்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டியில் நடைபெற்ற கட்சி பிரமுகர்கள் இல்ல திருமண விழாவில் வைகோ கலந்து கொண்டார். நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் நிஜாம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story