உணவு தரம் குறித்து புகார் அளிக்க 'வாட்ஸ் அப்' எண் வெளியீடு -தமிழக அரசு நடவடிக்கை


உணவு தரம் குறித்து புகார் அளிக்க வாட்ஸ் அப் எண் வெளியீடு -தமிழக அரசு நடவடிக்கை
x

உணவு தரம் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க ஏதுவாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ‘வாட்ஸ் அப்’ எண் வெளியிட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு முழுவதும் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் எளிதில் கெட்டுபோகக்கூடிய உணவுகளான சவர்மா, இறைச்சி வகைகள் மற்றும் அனைத்து வகையான சட்னி, மோர், தயிர் ஆகிய உணவுகளின் தரம் குறித்து சிறப்பு ஆய்வு மேற்கொள்ள அனைத்து மாவட்ட நியமன அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி 15 ஆயிரத்து 236 உணவகங்கள் ஆய்வு செய்யப்பட்டு ஆயிரத்து 572 உணவகங்களில் தரமற்ற உணவு விற்பனை செய்வது கண்டறியப்பட்டு 5 ஆயிரத்து 18 கிலோ தரமற்ற இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

ரூ.8 லட்சத்து 79 ஆயிரத்து 800 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், தரம் குறைவான உணவு பொருட்களை வைத்திருந்த 23 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மொத்தம் ரூ.10 லட்சத்து 26 ஆயிரத்து 800 அபராதம் விதிக்கப்பட்டது.

குட்கா, பான் மசாலா

இதேபோல கடந்த 2 ஆண்டுகளில் சுமார் ரூ.12 கோடியே 56 லட்சம் மதிப்புள்ள 191 டன் அளவிலான குட்கா, பான் மசாலா கைப்பற்றப்பட்டு உள்ளது. மேலும் உணவு பாதுகாப்புத் துறை வாயிலாக கடந்த 2 ஆண்டுகளில் உணவு நிறுவனங்களில் இணையவழி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

48 ஆயிரத்து 217 உணவு மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு 9 ஆயிரத்து 720 உணவு மாதிரிகள் தரமற்றது என பகுப்பாய்வு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில், உரிமையியல் நீதிமன்றத்தில் 9 ஆயிரத்து 93 வழக்குகள் தொடரப்பட்டு ரூ.7 கோடியே 97 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

'வாட்ஸ் அப்' எண்

தொடர்ந்து, உணவின் தரத்தை உறுதி செய்யும் வகையில் பல்வேறு அறிவுரைகளை அனைத்து உணவு வணிகர்களும் பின்பற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட நியமன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அதன்படி உணவு வணிகர்கள் தங்களது உணவு பாதுகாப்பு செயல்முறைகளான உணவு தயாரிப்பு, சேமிப்பு உள்ளிட்டவைகளை தாங்களாகவே சுய மதிப்பீடு மேற்கொள்ள வேண்டும். இதற்கான சரிபார்ப்பு படிவங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் ஆய்வின்போது சமர்ப்பிக்க வேண்டும். உணவு வணிகர்கள் மற்றும் உணவினை கையாளுபவர்களுக்கு உணவு பாதுகாப்பு குறித்த பயிற்சி வழங்கப்பட வேண்டும். உணவு வணிகர்களின் சங்கங்களுக்கு கூட்டங்களை நடத்தி உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உண்ணத் தகுந்த உணவை தேர்வு செய்வது குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல் உணவின் தரம் குறித்து பொதுமக்கள் தங்களுடைய புகார்களை நுகர்வோர் உணவு பாதுகாப்பு செல்போன் செயலி மூலமாகவும், 94440 42322 என்னும் 'வாட்ஸ் அப்' எண் வாயிலாகவும் பதிவு செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story