என் பெயரில் மட்டும் அல்ல உயிரிலும் தமிழ் இருக்கிறது - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
எனது பெயரில் மட்டுமல்ல எனது உயிரிலும் தமிழ் இருக்கிறது என கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் காந்தி உலக மையத்தின் சார்பில் மண்ணும் மரபும் என பழங்கால தமிழ் மரபை மீட்டெடுக்கும் 3 நாள் நிகழ்ச்சியை புதுச்சேரி மற்றும் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு காந்தி உலக மைய நிறுவனர் எம்.எல்.ராஜேஷ் தலைமை தாங்கினார். திரைப்பட நடிகர்கள் ரமேஷ் கண்ணா, வையபுரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது,
தமிழை நன்றாக படியுங்கள். நன்றாக உச்சரியுங்கள். ஆங்கிலம் பேச வரவில்லை என்றால் பராவாயில்லை. அது என் மொழி கிடையாது. ஆனால் தமிழ் பேச வரவில்லை என்றால் அதற்கு மன்னிப்பே கிடையாது.
தமிழ் உடன் இன்னொரு மொழியை கற்றுக் கொள்வது தவறு இல்லை என்று தான் நான் கருத்து சொன்னேன். உடனே இணையதளத்தில் இந்தி படிக்க சொல்கிறாயா? சமஸ்கிருதம் படிக்க சொல்கிறாயா? நான் இன்னொரு மொழி என்று தானே சொன்னேன்.
இதுல அவர்கள் என்ன குறிப்பிடுகிறார்கள் என்றால் என்னமோ தமிழிசைக்கு தமிழ் பற்று இல்லை என்பது மாதிரியும், ஏதோ மற்றவர்களுக்கு தான் தமிழ் பற்று இருக்கிறது என்கிறார்கள். நான் மற்ற மொழி என்று சொன்ன உடனே தமிழை குறைத்து மதிப்பிடுகிறேன் என்று வேண்டுமென இணையதளத்தில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
என் பெயரில் மட்டும் அல்ல. என் உயிரிலும் தமிழ் இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் என் மொழியை கற்றுக்கொண்டு இன்னொரு மொழியை கற்றுக்கொள்வது இன்னொரு வாய்ப்பை ஏற்படுத்தி தரும். நான் தெலங்கனாவில் கவர்னராக இருக்கிறேன். தெலங்கனாவில் தெலுங்கில் பேசும் போது அந்த மக்களின் மனதை கவர முடிகிறது. இதில் என்ன தவறு என்று கேட்கிறேன்?.
இவ்வாறு அவர் பேசினார்.