அரசு இசை கல்லூரியில் தமிழிசை விழா
அரசு இசை கல்லூரியில் தமிழிசை விழா
கோவை
கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள தமிழக அரசு இசைகல்லூரியில் தமிழிசை விழாவை கலெக்டர் கிராந்திகுமார் தொடங்கி வைத்தார்.
தமிழக அரசு இசை கல்லூரி
கோவை மலுமிச்சம்பட்டியில் தமிழக அரசின் இசை கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் தமிழிசை விழா நேற்று நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தொடங்கி வைத்தார். மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன், தமிழக அரசு இசைக்கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ஏ.வி.எஸ்.சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில் வண்ணாமடை ஆர்.டி.ஜெயபாலன், நஞ்சைகவுண்டர்புதூர் ஏ.பார்த்திபன், கோட்டூர் என்.ஜெயப்பிரகாஷ், சரவடி ஜி.பிரகாஷ் ஆகியோரின் நாதஸ்வரம், தவில் இசையும், மைதிலி கிருஷ்ணன் (வீணை), எஸ்.சபரீஸ்வரன் (மிருதங்கம்), பொன்னாபுரம் ஆர்.தர்மராஜ் (கஞ்சிரா) ஆகியோரின் இசை நிகழச்சி நடைபெற்றது. இந்த இசையை பார்வையிட்ட பின்னர் கலெக்டர் கிராந்திகுமார் பேசியதாவது:-
தேவாரம், திருவாசகம்
ஒரு சமூகத்தில் உள்ள கலைகளை பொறுத்துதான் அந்த சமூகத்தின் கலாசார வளர்ச்சியை அறிய முடியும். தமிழ்நாட்டின் கலாச்சாரத்தில் பல்வேறு கலைகள் காலந்தோறும் சிறப்பாக வளர்ச்சி அடைந்துள்ளன. தொன்று தொட்டு விளங்கக்கூடிய தமிழிசையில் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் மிக முக்கிய பங்களிப்பாக உள்ளது.
தமிழக அரசு தமிழ்நாட்டின் கலைகளுக்கும், பண்பாட்டுக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றது. கலைகளில் மாணவர்கள் சிறந்து விளங்கும் வகையில் அரசு இசை கல்லூரிகளின் மூலம் பல்வேறு பாடப்பிரிவுகளில் சிறந்த முறையில் கற்றுத்தரப்படுகிறது. சிறுவயதில் எந்த கலைகளில் திறமை உள்ளது என்பதை கண்டறிந்து, அக்கலைகளின் மீதான ஆர்வம் காரணமாகவும், தங்கள் திறமைகளை மேலும் வளர்க்கும் விதமாகவும், இசை கல்லூரிகளில் சேர்ந்து உயர் படிப்பு படிக்க, அரசும் அவர்களை பல்வேறு வகையில் ஊக்கமளித்து வருகின்றது.
இவ்வாறு அவர் பேசினார்.