தமிழ்நாடும், கேரளாவும் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்பட்டு ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் விடியலை ஏற்படுத்த வேண்டும்
தமிழ்நாடும், கேரளாவும் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்பட்டு ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் விடியலை ஏற்படுத்தி தர வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
கேரள மீடியா அகாடமி சார்பில் 'மீடியா மீட்-2023' எனும் நிகழ்ச்சி சென்னை சேத்துப்பட்டில் உள்ள மலையாளி கிளப் அரங்கத்தில் நேற்று நடந்தது.
விழாக்குழு கன்வீனரும், 'டைம்ஸ் ஆப் இந்தியா' பத்திரிகையின் சென்னை ரெசிடென்ட் எடிட்டருமான அருண்ராம் வரவேற்றார். விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, 91 வயதான மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான பி.ஆர்.பி.பாஸ்கர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார். அதனை கேரள முன்னாள் மந்திரி பேபி பெற்றுக்கொண்டார்.
எரிச்சலாகவே இருக்கிறது
விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
சமத்துவத்திற்கு எதிராக இருக்கக்கூடியவர்களுக்கு இன்றைக்கு 'திராவிடம்' என்ற சொல் ஒரு எரிச்சலாகவே இருக்கிறது. ஊடகத்தினர் சுதந்திரமாக செயல்பட்டால்தான் நாட்டின் ஜனநாயகம் உயிர்ப்போடு இருக்கும். அந்தவகையில் மிக சிறப்பான நீண்ட அனுபவமிக்க ஊடகவியலாளர்களால் நிர்வகிக்கப்படும் இந்த அகாடமி எதிர்காலத்திலும் அத்தகைய ஊடகவியலாளர்களை உருவாக்குவதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
மூத்த பத்திரிகையாளர் பி.ஆர்.பி.பாஸ்கர் 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறையில் செயல்பட்டு வருவதைப் பார்க்கும் போது எழுத்தின் மீதும், ஊடகத்துறையின் மீதும், அதையும் தாண்டி இந்த நாட்டு மக்கள் மீதும் அவர் கொண்டுள்ள உண்மையான அக்கறையை நமக்கு எடுத்துக்காட்டிக்கொண்டிருக்கிறது.
ஊடகத்துறையின் தாக்கம்
அச்சு ஊடக காலம் தொட்டு ஊடகங்களின் இன்றைய மாற்றம் வரை அவர் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை இந்த நூலில் பதிவு செய்துள்ளார்.
இந்த துறைக்கு தான் வந்த காலத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறைவாக இருந்தது குறித்து பதிவு செய்துள்ளார். ஆனால் இன்று ஏராளமான பெண் பத்திரிகையாளர்கள் வந்து விட்டார்கள். அவர்கள் மிக சிறப்பாக செயல்பட்டு வருவதையும் பார்க்கிறோம்.
மேலும், தலித் பத்திரிகையாளர்களின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவாக இருக்கிறது என்ற அவரது ஆதங்கமானது சமூகநீதிக் குரலாக வெளிப்பட்டுள்ளது. இது ஓரளவு உண்மைதான்.
பன்முகத்தன்மைக்கு ஆபத்து
இதனை உணர்ந்துதான் ஒடுக்கப்பட்ட சமூகத்து இளைஞர்கள், அரசுப் பள்ளிகளில் படித்தவர்களில் இதழியல் ஆர்வம் கொண்டவர்களுக்கு இலவசமாக இதழியல் பயிற்சியை லயோலா கல்லூரியுடன் இணைந்து தமிழ்நாடு அரசு வழங்கியது.
இந்தியாவை காப்பாற்றுவதற்காக, இந்தியாவின் பாதுகாப்பே முக்கியம் என பேரறிஞர் அண்ணா திராவிடநாடு கோரிக்கையை கைவிட்டார்.
அன்னிய நாட்டால் இந்தியாவுக்கு ஆபத்து வந்த காலம் அது. வீடு இருந்தால்தான் ஓடு மாற்ற முடியும் என்று விளக்கம் அளித்து இந்த நிலைப்பாட்டை எடுத்தார் பேரறிஞர் அண்ணா. இதே போன்றுதான் இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு இன்று ஆபத்து வந்திருக்கிறது.
கடுமையாக எதிர்க்கிறோம்
வேற்றுமையில் ஒற்றுமை என்ற தத்துவத்துக்கு ஆபத்து வந்திருக்கிறது. மதச்சார்பின்மைக்கு ஆபத்து வந்திருக்கிறது. சமூகநீதியை சிதைக்க பார்க்கிறார்கள். இவை அனைத்தையும் சிதைப்பதன் மூலமாக இந்தியாவை சிதைக்க பார்க்கிறார்கள். இதனை அரசியல் தளத்தில் அரசியல் இயக்கங்களாகிய நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.
இந்தியாவைக் காப்பாற்றும் பணியில் ஊடகங்களும் தங்களது பங்களிப்பைச் செலுத்த வேண்டும்.
ஆட்சிப்பொறுப்புக்கு வந்தபிறகு 'இந்திய அரசியலமைப்புச் சட்டம்தான் என்னுடைய வேதம்' என்று சொல்லி நாடாளுமன்றத்தையும், அரசியலமைப்பு சட்டத்தையும் வணங்கியவர் பிரதமர்.
இரட்டை குழல் துப்பாக்கி
இப்போது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவே செயல்பட்டு கொண்டிருக்கிறார். இதனை நாட்டில் உள்ள அனைத்து மக்களும் உணர்ந்து இந்த போக்கை எதிர்க்க வேண்டும்.
தமிழ்நாடும், கேரளமும் நாட்டைக் காக்கின்ற முயற்சியில் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்பட்டு ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் விடியலை ஏற்படுத்தி தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் அமைச்சர் சேகர்பாபு, ஏசியாநெட் மீடியா குழுமத்தின் நிறுவனர் சசிகுமார், கேரள மீடியா அகாடமி தலைவர் ஆர்.எஸ்.பாபு, செயலாளர் சந்தோஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.