தமிழக சட்டசபை 17-ந் தேதி கூடுகிறது: முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற திட்டம்
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 17-ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இதில் துணை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
சென்னை,
தமிழக சட்டசபையின் கடந்த கூட்டத்தொடர் மே மாதம் 10-ந் தேதி நிறைவடைந்தது.
அடுத்த கூட்டத்தொடர் 6 மாதங்களுக்குள் கூட்டப்பட வேண்டும்.
17-ந் தேதி
இந்த நிலையில் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 17-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டசபை கூட்டரங்கத்தில் கூட்டப்படும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு சபாநாயகர் மு.அப்பாவு அளித்த பேட்டி வருமாறு:-
இரங்கல் குறிப்பு
இந்த மாதம் 17-ந் தேதி சட்டசபை கூட்டத்தொடர் தொடங்குகிறது. மறைந்த சட்டசபை உறுப்பினர்கள், பிரபலங்கள் ஆகியோருக்கு அன்று இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும். மறைந்த சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவின் இறப்பு குறித்து அன்று சட்டமன்றத்தில் இரங்கல் குறிப்பு வைக்கப்பட்டு, அன்றைய சட்டசபை நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படும்.
அதன் பின்னர் சபாநாயகர் அலுவலகத்தில் சட்டசபை அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறும். அதில், சட்டசபையை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும்? என்பது பற்றி முடிவு செய்யப்படும். மேலும், தாக்கல் செய்யப்படும் துணை நிதிநிலை அறிக்கை மீது எவ்வளவு நாள் விவாதிக்க வேண்டும் என்பது பற்றியும் முடிவு செய்யப்படும்.
எதிர்க்கட்சி துணை தலைவர்
அ.தி.மு.க.வில் இரண்டு தரப்பில் இருந்து கடிதங்கள் கொடுக்கப்பட்டன என்றும், எதிர்க்கட்சி துணை தலைவரின் இருக்கை மாற்றம் தொடர்பாக முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதா? என்றும் கேட்டால், எதிர்க்கட்சி தலைவரும், துணை தலைவரும் கடிதங்கள் தந்துள்ளனர்.
அவை என் பரிசீலனையில் உள்ளன. சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அது எடுக்கப்படும். சட்டமன்றம் கூடாத நிலையில் அதற்கு முன்பு ஏன் நடவடிக்கை எடுக்க வேண்டும்? சட்டமன்றம் கூடும் அன்று எல்லாம் சரியாக இருக்கும்.
யாருக்கு எந்த இருக்கை தரப்பட வேண்டும் என்பது எனது முடிவு. 'அவருக்கும், எனக்கும் பிரச்சினை, அங்கு உட்காரமாட்டேன்' என்பதன் அடிப்படையில் இடம் அளிக்க முடியாது. சபை மரபுப்படிதான் இருக்கைகள் வழங்கப்படும். அதில் இன்னும் முடிவு எடுக்கவில்லை.
கண்ணியமாக....
எதிர்க்கட்சி தலைவரும், துணை தலைவரும் அருகருகே அமர்ந்தால் ஏதாவது பிரச்சினை வருமா? என்று கேட்டால், சட்டசபை மாண்புப்படிதான் அவர்கள் நடப்பார்கள். 2 பேருமே முன்னாள் முதல்-அமைச்சர்கள். கண்ணியமாகத்தான் நடப்பார்கள்.
கொள்கை ரீதியாக அவர்களுக்குள் சில பிரச்சினைகள் இருக்கின்றன. அதுபற்றி பேசி முடிவெடுப்பார்கள். அவர்கள் இரண்டு தரப்பாக கடிதம் கொடுத்திருந்தாலும், அவர்கள் இரட்டை இலை சின்னத்தில்தானே வெற்றி பெற்று வந்துள்ளனர்.
இதில் சட்டமன்ற மரபுப்படி நான் முடிவெடுப்பேன். அந்த கடிதங்கள் எனது ஆய்வில் உள்ளன. அவர்களிடம் விளக்கம் கேட்க வேண்டுமா? வேண்டாமா? என்பது பற்றி ஆய்வு செய்து முடிவெடுப்பேன்.
நேரலை
சட்டமன்ற கூட்டத்தொடரில் கேள்வி-பதில் நிகழ்ச்சியை நேரலை ஒளிபரப்பாக அளித்துக்கொண்டிருக்கிறோம். சட்டசபை நிகழ்ச்சிகளை முழுமையாக அளிக்க வேண்டும் என்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்து வருகிறோம். விரைவில் முழுமையாக நேரலை ஒளிபரப்பாக வர வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய மசோதா
துணை பட்ஜெட் தவிர ஜெயலலிதா மரணம் குறித்து ஆய்வு செய்த நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கைகளும் தாக்கல் ஆகும் என்று தெரிகிறது.
இது தவிர ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களும் இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.