தமிழக சட்டசபை அக்டோபர் 9-ந் தேதி கூடுகிறது -சபாநாயகர் அப்பாவு பேட்டி


தமிழக சட்டசபை அக்டோபர் 9-ந் தேதி கூடுகிறது -சபாநாயகர் அப்பாவு பேட்டி
x

தமிழக சட்டசபை அக்டோபர் 9-ந் தேதி கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு கூறினார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 21-ந் தேதி நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து சட்டசபை நிகழ்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டன.

சட்டசபை 6 மாத கால இடைவெளிக்குள் கூட்டப்பட வேண்டும். அதன்படி, அக்டோபர் 9-ந் தேதி காலை 10 மணிக்கு சட்டசபை கூட உள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து சட்டமன்ற அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். 2023-24-ம் ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கை இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா

தேர்தலை மனதில் கொண்டு மகளிர் இடஒதுக்கீடு மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் சட்டசபையிலும் நிறைவேற்றப்படும். ஆனால் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் எப்போது நிறைவேற்றப்படும் என்பது தெரியாது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிருக்கு ஒரே கையெழுத்தில் மாதம் தோறும் ரூ.1000 உரிமை தொகை கிடைக்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளார். இதன்மூலம் தமிழகத்தில் உள்ள மகளிர் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதனால் தாங்களும் மகளிருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக இந்த மசோதாவை பா.ஜ.க. கொண்டுவந்துள்ளதோ என பேசுகிறார்கள்.

இப்போதைக்கு நடைமுறைப்படுத்த முடியாது

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை இப்போதைக்கு நடைமுறைப்படுத்த முடியாது என அவர்களே தெளிவுபடுத்துகிறார்கள்.

அதாவது, 2021-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தவில்லை. அதுவே 2027-க்கு பிறகு தான் எடுக்கப்படும் என்கிறார்கள். அது எப்போது எடுக்கப்படும் என தெரியாது. நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளை மறு வரைமுறை செய்ய வேண்டும் என்கிறார்கள்.

இதெல்லாம் முடிந்த பின்புதான் இந்த மசோதா செயல்பாட்டுக்கு வரும். இந்த மசோதாவை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள் என்ற அடிப்படையிலும், புதிய நாடாளுமன்றம் தர்க்கம் இல்லாமல் நடைபெறட்டும் என்பதற்காகவும் இந்த மசோதாவை இப்போது கொண்டு வந்திருக்கலாம்.

கவர்னர் பேசுவது சரியா?

உண்மையிலேயே இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என நினைத்திருந்தால் 2014-ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த போதே கொண்டு வந்திருக்கலாம்.

அமைச்சரை கூடி முடிவெடுக்கக்கூடிய மசோதா, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மசோதா ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிப்பது மட்டும் தான் கவர்னரின் பணி. இந்திய அரசியலமைப்பு சட்டப்படி ஆட்சி நடக்கிறது. அந்த அடிப்படையில் சட்டத்தின்படி எல்லோரும் நடந்து கொள்ள வேண்டும.

இது மதசார்புள்ள நாடு என கவர்னர் சில நேரங்களில் பேசுகிறார். அது தவறு. இதை அவர் தவிர்க்கலாம். மதசார்பற்ற நாட்டில் அதுபோன்ற வார்த்தைகளை பொறுப்பில் இருப்பவர்கள் கூறுவது சரியாக இருக்குமா? என தெரியவில்லை.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை

எதிர்கட்சித் துணைத்தலைவர் இருக்கை ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டது அதில் எந்த மாற்றமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அனல்பறக்கும்

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2024) மே மாதம் நடைபெற உள்ள நிலையில் இந்த கூட்டத்தொடர் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என கருதப்படுகிறது.

சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் கிளப்பும் என்பதால் இந்த கூட்டத்தொடரில் அனல் பறக்கும். எதிர்கட்சியினருக்கு பதிலடி கொடுக்க அரசு தரப்பும் தயாராக இருப்பதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்றும் தெரிகிறது.

கவர்னர் ஆர்.என்.ரவி, பல சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருக்கும் விவகாரமும் இந்த கூட்டத்தொடரில் எதிரொலிக்கலாம்.

காவிரி பிரச்சினை

காவிரி நீர் பிரச்சினை பற்றி இந்த கூட்டத்தொடரில் விவாதிக்கப்படலாம் என்றும், கர்நாடாக அரசுக்கு எதிராக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பல முக்கிய அறிவிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 110-வது விதியின் கீழ் அறிவிக்கவும் வாய்ப்பு உள்ளது.


Next Story