தமிழக பா.ஜ.க. பிரமுகர் எஸ்.வி.சேகர் - ஓ.பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு


தமிழக பா.ஜ.க. பிரமுகர் எஸ்.வி.சேகர் - ஓ.பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு
x

தமிழக பா.ஜ.க. பிரமுகரும், திரைப்பட நடிகருமான எஸ்.வி.சேகரை ஓ.பன்னீர் செல்வம் திடீரென்று சந்தித்துள்ளார்.

சென்னை,

தமிழக பா.ஜ.க. பிரமுகரும், திரைப்பட நடிகருமான எஸ்.வி.சேகர் தனது 70 -வது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினார். இந்த விழாவில் பங்கேற்குமாறு ஓ.பன்னீர்செல்வத்துக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் கொரோனா தொற்றால் குணமடைந்து, டாக்டர்கள் அறிவுரையின்பேரில் வீட்டுத்தனிமையில் இருந்ததால் எஸ்.வி.சேகர் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை.

இந்த நிலையில் எஸ்.வி.சேகர் வீட்டுக்கு ஓ.பன்னீர்செல்வம் இன்று திடீரென்று சென்றார். அவருக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்து, பரிசு பொருளையும் வழங்கினார். பின்னர் எஸ்.வி.சேகர் தாயாரின் காலில் விழுந்து ஓ.பன்னீர்செல்வம் ஆசீர்வாதம் பெற்றார்.

இதையடுத்து ஓ.பன்னீர்செல்வமும், எஸ்.வி.சேகரும் 20 நிமிடங்கள் பேசி உள்ளனர். அப்போது அரசியல் நிகழ்வுகள் குறித்து இருவரும் பேசியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அ.தி.மு.க. தனது கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து கூறி வருகிறார். இந்த நிலையில் அவர், பா.ஜ.க.பிரமுகரான எஸ்.வி.சேகரை சந்தித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.


Next Story