தமிழக பட்ஜெட்: பொதுமக்கள் வரவேற்பும்- எதிர்பார்ப்பும்


தமிழக பட்ஜெட்: பொதுமக்கள் வரவேற்பும்- எதிர்பார்ப்பும்
x

தமிழக பட்ஜெட் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

புதுக்கோட்டை

பட்ஜெட் தாக்கல்

தமிழக சட்டசபையில் 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். அதில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்பது உள்பட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் பட்ஜெட் குறித்து புதுக்கோட்டை மக்கள் மற்றும் தொழில்துறையினர் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-

மகளிர் உரிமைத்தொகை

அரிமளம் ஒன்றியம் தாஞ்சூர் கிராமத்தை சேர்ந்த சந்திரா:- மகளிர் உரிமைத்தொகை மாதந்தோறும் ரூ.1,000 அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ந் தேதி முதல் வழங்கப்படும் எனவும், இதற்காக ரூ.7 ஆயிரம் கோடி நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகள் இத்திட்டத்தில் பயன்பெறுவார்கள். கூலி வேலை செய்யும் பெண்கள் உடல்நிலை சரியில்லாமல் போனாலும் மருந்து, மாத்திரைகளை வாங்கவும், தங்களுடைய அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற இத்திட்டம் பெரும் உதவியாக அமையும். இதேபோல் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்க ரூ.30 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு, முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் உள்ளிட்ட அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது.

அரசு ஊழியர்கள் ஏமாற்றம்

புதுக்கோட்டை மாவட்ட அரசு ஊழியர்கள் சங்க தலைவர் ஜபருல்லா:- இந்த பட்ஜெட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை தொடர்பாக எந்தவித அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு இல்லாதது பெரும் ஏமாற்றம். மக்கள் நலன் சார்ந்த பிற திட்டங்கள் மற்றும் பெண்களுக்கு உரிமை தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கிறோம்.

மீனவர்களுக்கு மானிய டீசல்

கோட்டைப்பட்டினம் விசைப்படகு உரிமையாளர் சங்க தலைவர் அசன் மைதீன்:- தடைக்கால நிவாரண தொகை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரம் உயர்த்தி கொடுத்ததற்கு தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். ஆனால் மீனவர்கள் எதிர்பார்த்த அம்சங்கள் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. மீனவர்களுக்கு மாதம் 1,800 லிட்டர் மானிய டீசல் வழங்கப்படுகிறது. அதனை 2,500 லிட்டராக உயர்த்தி கேட்டோம். அது குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. மேலும், மானிய டீசலை கொள்முதல் விலைக்கு மீனவர்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அது குறித்தும் எந்தவித அறிவிப்பும் இடம் பெறவில்லை.

புத்தகத்திருவிழா

இலுப்பூரை சேர்ந்த இயன்முறை ஆசிரியர் கோவிந்தசாமி:- உலகை மாற்றியமைக்கும் மிக வலிமையான ஆயுதம் கல்விதான் என்றார் நெல்சன் மண்டேலா. அவ்வகையில் கல்விக்காக ஒதுக்கப்படுகிற நிதியே நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்கும். கல்வி துறையின் வளர்ச்சிக்காக தமிழக அரசு ரூ.40 ஆயிரத்து 299 கோடி ஒதுக்கி இருப்பது வரவேற்கத்தக்கது. புதிய புதிய திட்டங்களை அரசு கண்டறிந்து அதை செயல்படுத்தி வருவதும், எண்ணும் எழுத்தும் இன்றைய கல்வி முறைக்கு கூடுதலாக ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதும் போற்றப்படும் திட்டங்களாகும். மேலும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் தோறும் புத்தகத்திருவிழா மற்றும் இலக்கிய விழாவுக்காக ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதும் மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. ஒருங்கிணைந்த கல்வியில் மாற்றுத்திறனாளிகளுக்காக அரசு நிதி ஒதுக்கி காலதாமதம் இன்றி உதவி உபகரணங்கள் கிடைக்க வழிவகை செய்வது வரவேற்கத்தக்கது. அதே வேளையில் ஒருங்கிணைந்த கல்வியில் மாற்றுத்திறனாளிகளுக்காக பணியாற்றும் சிறப்பு பயிற்றுனர்கள், இயன்முறை மருத்துவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், வனத்துறை மற்றும் அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வருகிற பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறை என்னும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து செயல்படுத்த வேண்டும்.

மன நிறைவு தரும் பட்ஜெட்

கறம்பக்குடியை சேர்ந்த ஞானசேகர்:- வருவாய் பற்றாக்குறையை கணிசமாக குறைத்து, அதே வேளையில் சாமானிய மக்கள் பயன் பெறும் வகையில் மிக நேர்த்தியான பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்து உள்ளார். மகளிர் உரிமை தொகை, காலை உணவு திட்டம் விரிவாக்கம், சுய உதவி குழுக்களுக்கான நிதியுதவி அதிகரிப்பு போன்றவை நல்ல பலன் தரும். அனைத்து துறைகளுக்கும் கணிசமாக நிதி அதிகரிக்கப்பட்டு உள்ளது. தொழில்துறை, கல்வித்துறை மற்றும் மருத்துவ கட்டமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது மாநிலத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும். 400 கோவில்களுக்கு குடமுழுக்கு, பள்ளிவாசல், தேவாலய வளர்ச்சிக்கு கூடுதல் நிதியுதவி போன்றவை ஆன்மிக நாட்டம் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சி தரும். மொத்தத்தில் அனைத்து தரப்பினருக்கும் மன நிறைவு தரும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்து உள்ளது.

பத்திரப்பதிவு கட்டணம்

புதுக்கோட்டை மாவட்ட வர்த்தக கழக தலைவர் சாகுல் அமீது:- இந்த பட்ஜெட்டில் மகளிருக்கான திட்டம் மற்றும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது வரவேற்கக்கூடியது. ஆனால் வணிகர்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் பற்றி எதுவும் அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. வணிகர் நல வாரியம் தொடர்பான அறிவிப்புகள் இல்லை. சொத்து வரி, தொழில் வரியை குறைத்தல், மின்சார கட்டணம் மாதம் ஒரு முறை அமல்படுத்துதல் போன்றவை பற்றி அறிவிப்பு இல்லை. வரி ஆதாரமாக இருக்கிற வணிகர்களுக்கு எதுவும் செய்யவில்லை. பத்திரப்பதிவு கட்டணம் 2 சதவீதம் குறைத்தது சொத்து வாங்கிறவர்களுக்கு தான் பயன். புதுக்கோட்டை மாவட்டத்திற்கென எந்தவொரு திட்டமும் அறிவிக்கப்படாதது ஏமாற்றம் தான்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story