சட்டசபை கூடுவதை முன்னிட்டு 26-ந்தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்


சட்டசபை கூடுவதை முன்னிட்டு 26-ந்தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்
x

தமிழக சட்டசபை விரைவில் கூடுவதை முன்னிட்டு, தமிழக அமைச்சரவை கூட்டம் 26-ந்தேதி (திங்கட்கிழமை) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடுகிறது.

சென்னை,

தமிழக சட்டசபை அடுத்த அக்டோபர் மாதம் 2-ம் வாரத்தில் கூடுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்த கூட்டத்தொடர் 4 நாட்கள் நடைபெற வாய்ப்புள்ளது.

இந்த கூட்டத்தொடரில் சட்டசபையில் தாக்கல் செய்யப்படவுள்ள சட்ட மசோதாக்கள், அறிக்கைகள் பற்றி ஆலோசிப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 26-ந்தேதி காலை 9.30 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்கின்றனர்.

ஆன்லைன் ரம்மி தடை

இந்த கூட்டத்தொடரின்போது, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணை அறிக்கை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு குறித்த விசாரணை அறிக்கை, ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடுகள் குறித்த விசாரணை அறிக்கை ஆகியவற்றை சட்டசபையில் சமர்ப்பிப்பது பற்றி இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

அதுபோல் புதிய சட்ட மசோதாக்களை தாக்கல் செய்வது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி அளிக்கப்படும். அந்த வகையில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது குறித்த சட்ட மசோதாவை நிறைவேற்றுவது பற்றி இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.


Next Story