முதல்-அமைச்சர் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்


முதல்-அமைச்சர் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்
x

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளது.

சென்னை,

தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இன்று மாலை 6 மணிக்கு நடக்கும் இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்று தமிழகத்தின் நலன்சார்ந்த பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கிறார்கள். குறிப்பாக சென்னையை அடுத்த பரந்தூரில் அமைய உள்ள 2-வது பசுமை விமான நிலைய விவகாரம் முக்கியமான இடத்தை பிடிக்கும் என்று தெரிகிறது.

பரந்தூரில் விமான நிலையத்துக்காக நிலத்தை கையகப்படுத்துவதில் உள்ள பிரச்சினை தொடர்பக எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கலாம்? என்பது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது. அதேநேரத்தில் பரந்தூரில் புதிய விமான நிலையத்துக்கு எதிராக போராடி வரும் கிராம மக்களை சமாதானப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்வது தொடர்பாகவும், அவர்களுக்கு இழப்பீடு மற்றும் மேலும் சில சலுகைகள் வழங்குவது தொடர்பாகவும் விவாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

ஆறுமுகசாமி ஆணையம்

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை முதல்-அமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாகவும் விவாதிக்கப்பட உள்ளது. இந்த அறிக்கையை சட்ட சபையில் வைப்பதா? அல்லது நேரடியாக மக்கள் பார்வையில் வெளியிடுவதா? என்பது பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.

ஏற்கனவே தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அறிக்கையும் தமிழக அரசிடம் அளிக்கப்பட்டள்ளது. இந்த அறிக்கை தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டப்போதிலும், எப்போது சட்டசபையை கூட்டலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட இருக்கிறது. மேலும் இந்த கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடை செய்வது குறித்த அவசர சட்டம் நிறைவேற்றுவது சம்பந்தமாகவும் முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.

மழைநீர் வடிகால்

வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க இருப்பதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து மக்களை பாதுகாப்பது பற்றியும், வெள்ளத்தடுப்பு, மழைநீர் வடிகால் மற்றும் பாதாள சாக்கடை பணிகளை துரிதப்படுத்துவது சம்பந்தமாகவும் ஆலோசிக்கப்படுகிறது. அப்போது பணிகளை குறித்த காலத்துக்குள் முடிக்க மு.க.ஸ்டாலின் அடுக்கடுக்கான உத்தரவுகளை பிறப்பிக்க உள்ளார். தமிழகத்துக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்தவகையில், தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்காக அரசிடம் விண்ணப்பித்துள்ள நிறுவனங்களுக்கு அனுமதியும், சலுகைகளும் வழங்குவது குறித்தும் முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துதல், மாநில கல்வி கொள்கை உள்ளிட்டவை பற்றியும் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும், அதுதொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story