ராஜஸ்தானில் தமிழக போலீசார் சிறைபிடிக்கப்பட்ட விவகாரம்: திருச்சி போலீஸ் கமிஷனர் விளக்கம்


ராஜஸ்தானில் தமிழக போலீசார்  சிறைபிடிக்கப்பட்ட விவகாரம்: திருச்சி போலீஸ் கமிஷனர் விளக்கம்
x
தினத்தந்தி 7 March 2023 7:33 AM IST (Updated: 7 March 2023 7:33 AM IST)
t-max-icont-min-icon

திருட்டு நகைகளை மீட்க சென்றபோது ராஜஸ்தானில் திருச்சி தனிப்படை போலீசார் சிறை பிடிக்கப்பட்டனர். அவர்கள் பல மணிநேர விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டனர்.

திருச்சி,

திருட்டு நகைகளை மீட்க சென்றபோது ராஜஸ்தானில் திருச்சி தனிப்படை போலீசார் சிறை பிடிக்கப்பட்டனர். அவர்கள் பல மணிநேர விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டனர்.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரத்தன் (வயது 38), ராம்பிரசாத் (22), சங்கர் (25), ராமா (40) ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகம் வந்தனர். இவர்கள் சாலையோரங்களில் தங்கி கொண்டு பலூன் விற்பது போலவும், பெட்ஷீட் வியாபாரம் செய்வது போலவும், போக்குவரத்து சிக்னல்களில் பிச்சை எடுத்து கொண்டும் இருந்தனர்.

இவர்களில் ஆண்கள் ரெயில் தண்டவாளங்களையொட்டியுள்ள பூட்டிய வீடுகளில் நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் மீது திருச்சி மாநகரம், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 10 வழக்குகள் உள்ளன. இந்த சம்பவங்களில் சுமார் 254 பவுன் தங்க நகைகளும், ஒரு கிலோ வெள்ளி பொருட்களும் திருட்டு போய் உள்ளன.

இந்தநிலையில் கடந்த டிசம்பர் மாதம் 23-ந் தேதி ரத்தன், சங்கர், ராம்பிரசாத், ராமா உள்ளிட்ட 4 பேரையும் திருச்சி மாநகர போலீசார் கைது செய்தனர். அப்போது அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருடப்பட்ட நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை ஒருவாரத்துக்குள் ராஜஸ்தான் கொண்டு சென்று அங்கு திருட்டு நகைகளை வாங்குபவரிடம் விற்றது தெரியவந்தது. பின்னர் திருடப்பட்ட நகைகளை மீட்பதற்காக, திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட அவர்களில் ரத்தன், சங்கர் ஆகிய 2 பேரை மட்டும் செசன்ஸ் கோர்ட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் சியாமளாதேவி காவலில் எடுத்தார். அவர்கள் 2 பேருடன், உதவி கமிஷனர் கென்னடி தலைமையில் உறையூர் இன்ஸ்பெக்டர் மோகன், சப்-இன்ஸ்பெக்டர் உமாசங்கரி உள்பட 15 பேர் கொண்ட தனிப்படை போலீசார் கடந்த 28-ந் தேதி ராஜஸ்தானுக்கு புறப்பட்டனர்.

கடந்த 2-ந் தேதி அங்குள்ள பில்வாரா மாவட்டம் சாப்புரா என்ற இடத்தில் உள்ள புலியாகலான் போலீஸ் நிலையத்துக்கு சென்று உள்ளூர் போலீசார் உதவியுடன் புலியா பஜார் என்ற இடத்தில் திருட்டு நகைகளை பெற்று வைத்திருந்த கன்சியாம் என்பவரிடம் இருந்து 300 கிராம் தங்கத்தையும், ரூ.2 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர். இதேபோல் திருட்டு நகைகளை வாங்கும் மற்றொரு நபரான அஜ்மீர் மாவட்டம் ராமாலயா கிராமத்தை சேர்ந்த சானியா மற்றும் அவரது கணவர் பண்ணாலால் ஆகியோரை பினாய் போலீஸ் நிலைய போலீசார் உதவியுடன் பிடித்து விசாரித்தபோது, அவர் வழக்கு சம்பந்தப்பட்ட 100 பவுன் தங்க நகைகளை திருப்பி கொடுப்பதாக ஒத்து கொண்டார். ஆனால் சானியாவிடம் இருந்து நகைகளை பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது.

இதனால் தனிப்படை போலீசார் மீண்டும் திருச்சிக்கு செல்ல முடிவெடுத்து ஜெய்ப்பூர் விமானநிலையத்துக்கு புறப்பட்டு சென்றபோது, நேற்று முன்தினம் காலை 11.30 மணிக்கு சானியாவின் சகோதரர் லட்சுமணன் தனிப்படையினரை செல்போனில் தொடர்பு கொண்டார். அவர், திருடப்பட்ட தங்க நகைகளுக்கு ஈடாக ரூ.25 லட்சம் கொடுத்து விடுவதாகவும், அந்த தொகையை அஜ்மீர் வந்து பெற்று கொள்ளும்படியும் கூறி உள்ளார்.இதையடுத்து உதவி கமிஷனர் கென்னடி, இன்ஸ்பெக்டர் சியாமளாதேவி மற்றும் ஒரு போலீஸ் ஆகியோர் காவலில் எடுத்த ரத்தன், சங்கர் ஆகியோருடன் விமானம் மூலம் திருச்சிக்கு புறப்பட்டு வந்தனர். ஆனால் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் மீதம் இருந்த தனிப்படையினர் 12 பேரும் அஜ்மீருக்கு புறப்பட்டு லட்சுமணன் கூறிய இடத்துக்கு பணத்தை பெறுவதற்காக சென்றபோது, அங்கு ராஜஸ்தான் மாநில ஊழல் தடுப்பு குழு அதிகாரிகள் திருச்சி தனிப்படை போலீசாரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

மேற்படி லட்சுமணன் திருட்டு வழக்கில் இருந்து தனது சகோதரியை விடுவிக்க வேண்டுமென்றால் ரூ.25 லட்சம் தர வேண்டும் என தமிழ்நாடு போலீசார் தங்களை மிரட்டுவதாக அங்குள்ள ஊழல் தடுப்புகுழு அதிகாரிகளிடம் பொய்யான தகவலை தெரிவித்துள்ளார். அதன்பேரிலேயே தவறான புரிதல் காரணமாக திருச்சி தனிப்படை போலீசாரை ராஜஸ்தான் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றது தெரியவந்தது.

இதையடுத்து இந்த விவகாரத்தில் உயர் அதிகாரிகள் தலையிட்டு ராஜஸ்தான் மாநில போலீசாருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் அவர்கள் வழக்கு தொடர்பான கோப்புகளை கேட்டனர். அவற்றை திருச்சி போலீசார் ராஜஸ்தான் போலீசாருக்கு அனுப்பி வைத்ததை தொடர்ந்து, பல மணிநேர விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட 12 பேர் கொண்ட தனிப்படை போலீசாரும் விடுவிக்கப்பட்டனர்.

இது குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா நிருபர்களிடம் கூறியதாவது:-

1,000 கண்காணிப்பு கேமராக்கள் திருச்சி தனிப்படை போலீசார் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை ராஜஸ்தானில் மீட்பதற்கு சென்றபோது, தவறான தகவலால் அந்த மாநில போலீசார் தனிப்படையினரை விசாரணைக்குட்படுத்தியுள்ளனர். இது குறித்து அவர்களிடம் விளக்கி கூறியபிறகு, அவர்கள் அனைவரையும் விடுவித்துள்ளனர். திருச்சி மாநகரத்தில் மட்டும் 183 பவுன் நகைகள் மீட்கப்பட வேண்டும். ஆனால் தற்போது 37½ பவுன் நகைகள் மட்டும் மீட்கப்பட்டுள்ளன.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர்கள் 4 பேரும் திருச்சி மாநகரத்தில் ஜெய்நகர், ராமலிங்காநகர், சக்திநகர், வயர்லெஸ்ரோடு, ஆர்.எம்.எஸ்.காலனி உள்ளிட்ட இடங்களில் கொள்ளையடித்துள்ளனர். திருச்சி மாநகரத்தில் வடமாநில தொழிலாளர்கள் 5 ஆயிரம் பேர் இருக்கிறார்கள்.

இங்கு அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை. திருச்சி மாநகரத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டமிட்டுள்ளோம். அந்தவகையில் 1,000 கண்காணிப்பு கேமராக்கள் தேவைப்படுகிறது. மேலும், கேமராக்கள் பொருத்தப்பட வேண்டிய இடங்களையும் தேர்வு செய்துள்ளோம். மேலும், குடியிருப்போர் சங்கங்களையும் ஒருங்கிணைத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story