தமிழக விவசாயிகளின் உரிமைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விட்டு கொடுக்கிறார் -அண்ணாமலை கடும் தாக்கு


தமிழக விவசாயிகளின் உரிமைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விட்டு கொடுக்கிறார் -அண்ணாமலை கடும் தாக்கு
x

பிரதமர் மோடியை எதிர்ப்பதாக கூறி தமிழக விவசாயிகளின் உரிமைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விட்டு கொடுத்து நாடகமாடி வருகிறார் என பாதயாத்திரையின் போது அண்ணாமலை குற்றம்சாட்டினார்.

நாகர்கோவில்,

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நேற்று காலையில் குமரி மாவட்டம் களியக்காவிளை பஸ்நிலையத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பாதயாத்திரையை தொடங்கினார்.

இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தேசியக் கொடியை ஏந்தியவாறு பங்கேற்றனர்.

அங்கு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கான 7½ கி.மீ. தூரத்துக்கான பாதயாத்திரையை மதியம் நிறைவு செய்தார். பின்னர் அவர் திறந்த வாகனத்தில் நின்றபடி பேசுகையில் கூறியதாவது:-

மோடி பிரதமராக வேண்டும்

தமிழகத்தில் நடைபெறுகிற ஆட்சி, அவலங்களை எடுத்துச் சொல்லி எப்படிப்பட்ட மோசமான குடும்ப ஆட்சி, ஊழல் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பதை சாமானிய மக்களுக்கு பட்டிதொட்டியெல்லாம் பறைசாற்றி 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நம்மைக் காக்கக்கூடிய ஒரேயொரு கடவுளாக இருக்கக்கூடிய நரேந்திரமோடி 3-வது முறையாக ஆட்சிக்கட்டிலில் பிரதமராக வரவேண்டும் என்பதை சொல்வதற்காக இங்கு வந்திருக்கிறோம்.

விவசாயிகள் உரிமை

கேரளாவும் குமரியை வஞ்சிக்கிறது. 18 ஆண்டுகளாக நெய்யாறு இடதுகரை கால்வாயில் தண்ணீர் விடவில்லை. 2 மாநில முதல்-அமைச்சர்களும் பிரதமர் நரேந்திரமோடியை எதிர்ப்பதாக கூறி நம் உரிமைகளை, விவசாயிகள் உரிமைகளை விட்டுக் கொடுத்து நாடகமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தை கடன் வாங்குவதில் முதல் மாநிலமாக மாற்றி வைத்துள்ளது தி.மு.க. அரசு. தமிழகத்துக்கு ரூ.7 லட்சத்து 53 ஆயிரம் கோடி கடன் உள்ளது. இந்தியாவில் அதிக கடன் வாங்கிய முதல் மாநிலமாக மாறியிருக்கிறோம்.

பா.ஜனதாவுக்கு காஷ்மீரில் ஒரு எம்.பி இருப்பது போன்று நாட்டின் கடைசி பகுதியான குமரியில் இருந்தும் ஒரு எம்.பி. வர வேண்டும். மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாலையில் வெட்டுமணியில் இருந்து இரவுபுதூர்கடை வரை 6 கி.மீ. தூரம் அண்ணாமலை பாதயாத்திரையாக தொண்டர்கள் புடைசூழ நடந்து சென்று நிறைவு செய்தார்.

முன்னதாக களியக்காவிளையில் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-

நீட் தேர்வில் அரசியல்

'நீட்' தேர்வுக்கு தி.மு.க. முழுக்க முழுக்க எதிரியாக உள்ளது. ஆளும் கட்சியாக தி.மு.க. வந்த பிறகும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'நீட்' தேர்வை வைத்து அரசியல் செய்கிறார். இது துரதிர்ஷ்டவசமானது.

வேங்கை வயல் மற்றும் நாங்குநேரி சம்பவத்தில் தமிழகத்தில் பல கட்சியினர் மவுன விரதத்தில் உள்ளனர். தி.மு.க. அமைச்சர்களே பல இடங்களில் சாதி வன்மத்தை கடைப்பிடிக்கிறார்கள். படம் சமூக அக்கறையில் எடுப்பது வேறு, சமூக தாக்கத்தை எடுப்பது என்பது வேறு. வன்முறையை தூண்டுவதை தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாரதமாதா சிலைக்கு மரியாதை

சுதந்திர தினத்தையொட்டி அண்ணாமலை நேற்று காலையில் கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபத்துக்கு சென்றார். அங்குள்ள பாரதமாதா சிலைக்கும், காந்தி நினைவிடத்திலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


Next Story