"தமிழகத்தின் போட்டி உலக நாடுகளுக்கு இடையே இருக்க வேண்டும்" - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு


தமிழகத்தின் போட்டி உலக நாடுகளுக்கு இடையே இருக்க வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
x

சென்னையில் ஜவுளி நகரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு அரசின் துணிநூல் துறை, மத்திய அரசின் ஜவுளித் துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு இணைந்து சென்னை மணப்பாக்கத்தில் பன்னாட்டு தொழில்நுட்ப ஜவுளிகள் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இதில் காணொலி காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

கருத்தரங்கில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தமிழகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் நிறுவனங்களை தொடங்கும் முயற்சியில் இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் போட்டி என்பது இந்திய மாநிலங்களுக்கு இடையே மட்டும் இல்லாமல் உலக நாடுகளுக்கு மத்தியில் இருக்க வேண்டும்.

ஜவுளித்துறையில் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது. அரசின் சீரிய முயற்சியால் தமிழகத்தில் தொழில் தொடங்க பன்னாட்டு நிறுவனங்கள் ஆர்வம் கொண்டுள்ளன. ஜவுளி உற்பத்தியில் உலக நாடுகளுக்கு தமிழகம் போட்டியாக இருக்க வேண்டும். புதிய ஒருங்கிணைந்த ஜவுளி கொள்கைகள் உருவாக்கிட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

சென்னையில் ஜவுளி நகரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாமல்லபுரத்தில் ரூ.30 கோடியில் கைத்தறி அருங்காட்சியகம் அமைக்க திட்டம். விருதுநகர் மாவட்டத்தில் 1500 ஏக்கர் ஜவுளிப் பூங்கா அமைக்க சிப்காட் மூலம் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

6 கூட்டுறவு நூற்பாலைகளில் பணிபுரியும் நிரந்தர தொழிலாளர்களுக்கு மாதம் ரூ 2,500 வீதம் ஊதிய உயர்வு வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்படவுள்ளது. நாட்டின் ஜவுளி ஏற்றுமதி வருவாயில் தமிழகத்தின் பங்கு 12% ஆக உள்ளது. ஜவுளித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னேற்றம் கண்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story