காவல் பணி சிறப்பானது:காவல்துறையில் சேர இளைஞர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேச்சு


காவல் பணி சிறப்பானது:காவல்துறையில் சேர இளைஞர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேச்சு
x

காவல் பணி சிறப்பானது என்றும், காவல்துறையில் சேர இளைஞர்கள் ஆர்வமாக உள்ளதாகவும் தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.

கடலூர்

வெள்ளி விழா

கடலூர் மாவட்ட தற்காலிக காவலர் பயிற்சி பள்ளி முதல்வராக இருந்த, தற்போதைய டி.ஜி.பி. சைலேந்திர பாபுவிடம் கடந்த 1997-ம் ஆண்டு பயிற்சி பெற்ற 356 போலீசார் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் நேற்று வெள்ளி விழாவை கடலூர் கோண்டூரில் கொண்டாடினார்கள்.

இந்த விழாவில் தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டு போலீசாருக்கு நினைவு பரிசு வழங்கி பேசியதாவது:-

துப்பாக்கி சூடு

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் இருந்தது. கடந்த 1997-98-ம் ஆண்டு சாதி கலவரங்கள் இருந்தது. கடலூர் முதுநகரிலும் கலவரம் நடந்தது. 3 பேர் கொலை செய்யப்பட்டார்கள். துப்பாக்கி சூடு நடந்தது.

காட்டுமன்னார்கோவில், சேத்தியாத்தோப்பிலும் துப்பாக்கி சூடு நடந்தது. பண்ருட்டி, பட்டாம்பாக்கம், நெல்லிக்குப்பம், ஆலப்பாக்கம், குமராட்சி, சேத்தியாத்தோப்பு ஆகிய இடங்களிலும் கலவரம் நடந்தது. இப்போது அந்த சூழ்நிலை இல்லை. தற்போது சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது.

சலுகை

தமிழ்நாடு காவல்துறை இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு அகில இந்திய பணித்திறன் போட்டியில் 33 மாநிலங்களை சேர்ந்த அனைத்து போலீசாரும் கலந்து கொண்டார்கள். இதில் தமிழக காவல்துறை முதலிடத்தை பிடித்தது. சென்னையில் நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியிலும் நாம் தான் முதலிடம். சி.பி.ஐ., என்.ஐ.ஏ. போன்ற பணியிடங்களுக்கு தமிழக காவல்துறையில் தான் ஆட்கள் எடுப்பார்கள்.

காவல் துறையில் பணியாற்றி உயிரிழந்த 2300 காவலர்களின் குழந்தைகளுக்கு போலீஸ் நிலையங்களில் வரவேற்பு அதிகாரி பதவி வழங்கி இருக்கிறோம். 1000 பேருக்கு திறமையின் அடிப்படையில் தனியார் துறையில் வேலைவாய்ப்பு வாங்கி கொடுத்து இருக்கிறோம். வேலைவாய்ப்பில் 10 சதவீத சலுகை பெற்று கொடுத்து இருக்கிறோம்.

ஆர்வம்

உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தில் காவலர்களின் சிறு, சிறு தண்டனைகள் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. கிராமங்களில் போட்டிபோட்டுக்கொண்டு காவலர்கள் தேர்வுக்கு படிக்கிறார்கள். அந்த அளவுக்கு காவல்துறை பணி சிறப்பானது. காவல்துறையில் சேர வேண்டும் என்று எல்லா கிராமங்களிலும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பயிற்சி எடுத்து வருகிறார்கள். ஆர்வமாக இருக்கிறார்கள். பொதுமக்களிடம் இருந்து நம்மிடம் நிறைய எதிர்பார்ப்பு உள்ளது. சிறு, சிறு பிரச்சினைகளுக்காகவும் நம்மிடம் தான் வருகிறார்கள். சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை.

கடந்த ஆண்டு 1674 போலீஸ் நிலையங்களில் 9 லட்சத்து 70 ஆயிரம் மனுக்களை பொதுமக்கள் கொடுத்து உள்ளார்கள். இந்த துறை மீது அவ்வளவு நம்பிக்கை அவர்களிடம் உள்ளது. வழக்குப்பதிவு செய்ததை சேர்க்கவில்லை. சென்னையில் டி.ஜி.பி. தலைமையில் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த ஆண்டு 45 லட்சத்து 25 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளது. அந்த அளவுக்கு பொதுமக்களிடம் நம்பிக்கை பெற்று இருக்கிறோம். ஆண்டுதோறும் பணியிடங்களை நிரப்புவது இப்போது தான் நடக்கிறது. நிறைய இளைஞர்கள் பணிக்கு வருகிறார்கள்.

மன நல ஆலோசகராக...

சட்டம், குற்றங்களை பற்றிய கல்வியை விட மனிதர்களை பற்றிய கல்வியை தான் படிக்கிறோம். மனிதர்களை பற்றிய கல்வியை தெரிந்தவர்கள் போலீசார். போலீசார் மன நல மருத்துவர்கள். மன நல ஆலோசகராக மாறலாம். அந்த அளவுக்கு நமக்கு தெரியும். வரும் இளைய சமுதாயத்திற்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். இவ்வாறு டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேசினார்.

அப்போது கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மற்றும் போலீசார் உடனிருந்தனர்.


Next Story