தமிழக மீனவர் சுட்டுக்கொலை: கர்நாடக வனத்துறைக்கு விஜயகாந்த் கண்டனம்


தமிழக மீனவர் சுட்டுக்கொலை: கர்நாடக வனத்துறைக்கு விஜயகாந்த் கண்டனம்
x

தமிழக மீனவர் கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக மீனவர் கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு கர்நாடக எல்லையில் அடிப்பாலாறு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சேலம் மாவட்டம் கொளத்தூர் காரைக்காடு பகுதியைச் சேர்ந்த ராஜா என்ற மீனவரை கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்துள்ளனர். இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியும் மன வேதனை அடைந்தேன். தமிழக மீனவரை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறைக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு புறம் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், தற்போது கர்நாடக வனத்துறையும் தமிழக மீனவர் ஒருவரை சுட்டுக் கொன்றது தமிழக மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த சம்பவத்தின் மூலம் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் உருவாகி உள்ளது. தமிழக மீனவரை சுட்டுக்கொன்ற கர்நாடகா வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க அம்மாநில அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

மேலும் இது போன்ற சம்பவம் இனிமேல் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் ராஜாவின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாயை தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருப்பது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவருவருக்கு வேலையும், 25 லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story