தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி


தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
x

தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி புதுக்கோட்டையில் 10 நாட்கள் நடைபெறுகிறது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில், செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் 'ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி' அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக்கண்காட்சி தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கினார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்தார். மேலும் நெகிழி மாசில்லா என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய மஞ்சப்பைகள் மற்றும் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய நாட்காட்டிகளையும் வழங்கினார். கண்காட்சி வருகிற 1-ந் தேதி வரை தொடர்ந்து 10 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் தொகுத்து கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களின் விற்பனை கண்காட்சி மற்றும் பாரம்பரிய உணவுப் பொருட்கள் அடங்கிய கண்காட்சி உள்ளது. இந்தநிகழ்வில் தினமும் மாலை 5 மணி முதல் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் கலந்துகொள்ளும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. இந்தநிகழ்ச்சியில், புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதப்பிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story