தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நிறைவு
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நிறைவு
நாகையில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நிறைவடைந்தது. கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களை கலெக்டர் பாராட்டினார்.
சாதனை விளக்க கண்காட்சி
நாகை அவுரி திடலில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி கடந்த 30-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடந்து வந்த இந்த கண்காட்சியில், தமிழக அரசின் திட்டங்களை பொதுமக்கள் தெளிவாக தெரிந்து கொள்ள ஏதுவாக புகைப்படங்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. மேலும் பல்வேறு துறை சார்பில் தமிழக அரசின் திட்டங்கள் குறித்து அரங்குகள் அமைக்கப்பட்டது. தொடர்ந்து மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளானோர் பங்கேற்று வந்தனர். நிகழ்ச்சியின் நிறைவு நாளான நேற்றுமுன்தினம் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கலெக்டர் பாராட்டு
இதில் கலந்து கொண்டவர்களுக்கு கலெக்டர் அருண்தம்புராஜ் பாராட்டு தெரிவித்து சான்றிதழ் மற்றும் கேடயத்தினை வழங்கினார். தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து அரங்குகளை வைத்திருந்த பல்வேறு துறை அலுவலர்களுக்கு கேடயத்தினை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி, சமூக நலத்துறை அலுவலர் தமிமுன்னிசா, துணை இயக்குனர் (காசநோய்) சங்கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் செல்வகுமார் நன்றி கூறினார்.