சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை- கோ.தளபதி எம்.எல்.ஏ. பேச்சு


சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை- கோ.தளபதி எம்.எல்.ஏ. பேச்சு
x

சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என கோ.தளபதி எம்.எல்.ஏ. கூறினார்.

மதுரை


சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என கோ.தளபதி எம்.எல்.ஏ. கூறினார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

மத்திய அரசு 2022-23-ம் ஆண்டினை சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்துள்ளது. எனவே உணவு பாதுகாப்பு துறை சார்பாக, சரியான உணவுகள் உண்ணுதல் என்ற திட்டத்தின் கீழ் சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வுகள் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த நிகழ்ச்சி, சிறுதானியங்கள் மேளா நிகழ்ச்சி மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நேற்று நடந்தது. மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெயராம பாண்டியன் வரவேற்றார். கலெக்டர் சங்கீதா முன்னிலை வகித்தார். மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி தலைமை தாங்கி, சிறுதானிய உணவுகள் கண்காட்சியினை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

தற்போது பொதுமக்களிடத்தில் துரித உணவு உட்கொள்ளும் வழக்கமும் அதிகரித்து வருகிறது. இத்தகைய உணவு பழக்க மாற்றம் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாகும். நமது முன்னோர் அன்றாட உணவில் அதிக அளவில் சிறுதானியங்களை சேர்த்துள்ளனர்.

உற்பத்தி அதிகரிப்பு

கேழ்வரகு, கம்பு, சாமை, தினை, குதிரைவாலி, சோளம், கொள்ளு போன்ற சிறுதானியங்கள் குறுகிய காலத்திலும், வறட்சியான சூழ்நிலையிலும் வளரக்கூடியவை. இதில் புரதம், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச் சத்து, வைட்டமின் போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. உணவில் தற்போது சிறுதானியங்கள் அதிகம் சேர்க்காததால் அவற்றின் உற்பத்தி குறைந்து விலை அதிகரித்துள்ளது. தமிழக அரசு சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் விவசாயிகளை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இன்றைய இளைஞர்கள் நமது அன்றாட உணவில் ஒருவேளையாவது சிறுதானிய உணவாக எடுத்துக்கொள்ள உறுதி ஏற்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் அமெரிக்கன் கல்லூரி முதல்வர் எம்.தவமணி கிறிஸ்டோபர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story