பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கு டெண்டர் கோரிய தமிழக அரசு


பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கு டெண்டர் கோரிய தமிழக அரசு
x

சென்னை அருகே பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையத்தை அமைப்பதற்காக தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது.

சென்னை,

தொழில் வளர்ச்சிக்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு அம்சமாக சென்னை அருகே பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையத்தை அமைக்க அரசு முடிவெடுத்துள்ளது.

இதற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணியை அரசு மேற்கொண்டபோது அந்தப்பகுதி மக்கள் பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதோடு ஒரு சில பகுதிகளில் மக்கள் போராட்டங்களையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பசுமை விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை எதிர்க்கும் மக்களை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், தங்கம் தென்னரசு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, நிலம் அளிப்பவர்களுக்கு அரசு அளிக்கும் வாழ்வாதாரம் பற்றி எடுத்துரைத்து உள்ளனர்.

'டிட்கோ' அறிவிப்பு

இந்த நிலையில் புதிய பசுமை விமானநிலையத்தை பரந்தூரில் அமைக்கும் பணியில் அடுத்த கட்ட நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக்கழகம் (டிட்கோ) சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை அருகே பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையத்தை அமைப்பதற்கான ஆலோசனைகளை பெறுவதற்காக ஆலோசனை நிறுவனத்தை தேர்வு செய்ய 'டிட்கோ' முன்வந்துள்ளது. இந்த திட்டம் தொடர்பான விரிவான தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார அறிக்கையை தயாரிக்க விருப்பமுள்ள ஆலோசனை நிறுவனங்கள் முன்வரலாம்.

இந்த திட்டம் தொடர்பான தேவையான அனுமதிகளை பெறுதல், ஒப்பந்த புள்ளி நடவடிக்கைகளை மேலாண்மை செய்தல் ஆகியவற்றுக்கான உதவிகள் தேவைப்படுகிறது.

விண்ணப்பம் வரவேற்பு

விருப்பமுள்ள ஆலோசனை நிறுவனங்கள், www.tidco.com மற்றும் tntenders.gov.in என்ற இணையதளங்களில் இருந்து ஆர்.எப்.பி. ஆவணங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்காக ரூ.25 ஆயிரம் தொகைக்கான வரைவு காசோலையை, விண்ணப்பத்துடன் டிட்கோவுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இந்த ஒப்பந்த புள்ளியில் (டெண்டர்) பங்கேற்க விரும்பும் ஆலோசனை நிறுவனங்களின் தகுதி, நிபந்தனைகள் போன்றவை ஆர்.எப்.பி. ஆவணத்தில் குறிக்கப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள டிட்கோ நிறுவனத்தில் வருகிற 20-ந்தேதி பிற்பகல் 3.30 மணியளவில் ஏலத்திற்கு முந்தைய கூட்டம் நடத்தப்படும்.

இதற்கான முன்மொழிவுகளை அனுப்புவதற்கான கடைசி நாள் ஜனவரி 6-ந்தேதி பிற்பகல் 3 மணியாகும். அன்று மாலை 3.30 மணிக்கு ஒப்பந்த புள்ளிகள் திறக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story