சென்னை போலீஸ் கமிஷனருக்கு நல் ஆளுமை விருது -தமிழக அரசு அறிவிப்பு


சென்னை போலீஸ் கமிஷனருக்கு நல் ஆளுமை விருது -தமிழக அரசு அறிவிப்பு
x

கொத்தடிமைகள் வாழ்க்கை தரத்தை உயர்த்திய திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மற்றும் ஆதரவற்ற மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் மீட்பு பணிகளுக்காக சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு நல் ஆளுமை விருது வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை,

மக்களுக்கு சிறந்த சேவை கிடைக்க சக பணியாளர்களை வழிநடத்தும் அரசு ஊழியர்; மக்களுக்கு அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் முறையாக கிடைக்க பணியாற்றுவோர், நிறுவனங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நல் ஆளுமை விருது வழங்கப்படுகிறது.

7 முயற்சிகள்

அந்த வகையில் இந்த ஆண்டு 7 முயற்சிகளுக்கு நல் ஆளுமை விருதுகளும், 12 முயற்சிகளுக்கு பாராட்டு சான்றிதழும் வழங்க தெரிவுக் குழு பரிந்துரைத்துள்ளது. அதன்படி,

* செங்கல்சூளையில் கொத்தடிமையாக பணியாற்றியவர்களை மீட்டெடுத்து அவர்களே செங்கல்சூளைகளை நடத்தும் தொழில்முனைவோராக வாழ்க்கைத் தரத்தை உயர்த்திய திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்;

* சமுதாயத்தில் விளிம்பு நிலையில் உள்ளா திருநங்கைகளுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து அவர்கள் வளர்ச்சிக்கு முன்முயற்சி எடுத்த செங்கல்பட்டு மாவட்ட சமூகநல அலுவலர்;

* மழைநீரை சேகரித்து 3 அடுக்குகளாக சுத்திகரித்து கழிவறை, கைகழுவுதல், பாத்திரம் கழுவுதலுக்கு பயன்படுத்தும் கட்டமைப்புகளை உருவாக்கும் முயற்சிக்காக திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்:

* நீர்நிலைகளை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்டு உருவாக்கி புனரமைத்த சிவகங்கை மாவட்ட கலெக்டர்;

* பேறுகால நலனை கண்காணித்து பேறுகால இறப்புகளின் சதவீதத்தை குறைத்த நெல்லை மாவட்ட கலெக்டர்;

* வேளாண் எந்திரங்களை செல்போன் செயலியினால் சுலபமாக வாடகைக்கு அளித்து விவசாயிகளை பயனடையச் செய்த தமிழ்நாடு வேளாண்மை பொறியியல் முதன்மைப் பொறியாளர்;

* ஆதரவற்ற மனநிலை பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, சிகிச்சை அளித்து, பராமரித்து, குடும்பத்துடன் இணைப்பது மற்றும் உரிமை கோரப்படாத மனித உடல்களை அடக்கம் செய்வது ஆகியவற்றுக்காக சென்னை போலீஸ் கமிஷனர், ஆகியோருக்கு நல் ஆளுமை விருது வழங்கப்படுகிறது.

12 பாராட்டு சான்றிதழ்

அதுபோல 12 முயற்சிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. அதன்படி, நீலகிரி மாவட்டம், உண்ணி மரச்செடிகள் மூலம் கைவினைப் பொருள் தயாரித்தல்; நெல்லை மாவட்டம், காணி ஒருங்கிணைந்த வாழ்வாதார மேம்பாடு;

மக்கள் நல்வாழ்வுத்துறையின், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட பயனை உறுதி செய்தல், இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48 திட்டங்கள்; சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி, கருப்பை, கருமுட்டை சூழல் படம் மற்றும் மார்பக நுண்கதிர் பட தொழில்நுட்பம் மூலம் பெண்ணின் உடல் நலன் பேணுதல்;

சென்னை மாநகராட்சி, சொந்த ஆதார வருவாயை புவிசார் தகவல் மற்றும் ஆளில்லா விமான தொழில்நுட்பம் மூலம் அதிகப்படுத்துதல்; அரியலூர் மாவட்டம், இணையம் மூலம் கைத்தறி, கைவினை பொருட்களை சந்தைப்படுத்துதல்;

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை நஞ்சையில் உளுந்து சாகுபடி திட்டம்; கரூர் மாவட்டம், கரூரின் கண்மணிகள் திட்டம்; நாமக்கல் மாவட்டம், ஒன்றுபடுவோம் உறுதி ஏற்போம், இளம்பெண்கள் நலன் திட்டம்; விருதுநகர் மாவட்டம், கண்மணி திட்டம்;

திருக்கோவில்களின் அனைத்து தரவுகளையும் உள்ளடக்கிய நிர்வாக மேலாண்மை திட்டம் உள்பட 12 முயற்சிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இந்த விருதுகளை உரியவர்களுக்கு சென்னை கோட்டை கொத்தளத்தில் 15-ந் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவின்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story