இஸ்ரேல் போர் எதிரொலி: தமிழர்களை பாதுகாக்க தமிழக அரசு தீவிரம்- உதவி எண்கள் அறிவிப்பு
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே திடீர் போர் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த நாட்டில் வசிக்கும் மற்ற நாட்டு மக்கள் தவித்து வருகிறார்கள்
சென்னை,
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே திடீர் போர் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த நாட்டில் வசிக்கும் மற்ற நாட்டு மக்கள் தவித்து வருகிறார்கள். இந்த நிலையில், அங்கு பணியாற்றும் தமிழகத்தை சேர்ந்த 15 தமிழர்கள், தமிழக அரசின் அயலக நலத்துறையை தொடர்பு கொண்டு, தங்களது நிலையை தெரிவித்துள்ளனர்.
அவர்களுக்கு நம்பிக்கையான, உத்தரவாதத்தை அயலக தமிழக நலத்துறை கொடுத்துள்ளது. இது குறித்து அயலாக தமிழக நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
இஸ்ரேலில் இருக்கும் தமிழகத்தை சேர்ந்த 15 நபர்கள் அயலக தமிழர் நலத்துறையை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளனர்.15 நபர்களும் இஸ்ரேலின் ஜெருசலேம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பணி செய்து வருகின்றனர். இஸ்ரேலில் தமிழகத்தை சேர்ந்த 15 நபர்களும் பாதுகாப்பாக இருந்தாலும் , போர் தீவிரமடைவதால் தங்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இஸ்ரேலில் உள்ள தமிழர்கள் அயலகத் தமிழர் நலத்துறையினரை தொடர்பு கொண்டால் இந்திய தூதரகம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 8760248625, 9940256444, 9600023645 ஆகிய தொலைபேசி எண்களிலும், nrtchennai@tn.gov.in, nrtchennai@gmail.com என்ற இ-மெயில் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.