காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வதைத் தவிர தமிழகத்திற்கு வேறு வழியில்லை


காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வதைத் தவிர தமிழகத்திற்கு வேறு வழியில்லை
x

காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வதைத் தவிர தமிழகத்திற்கு வேறு வழியில்லை என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

சென்னை,

காவிரி பிரச்சினையில் நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பிற்கு பிறகு சுப்ரீம் கோர்ட்டு ஒரு தீர்ப்பை வழங்கியது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்ட அனைவரும் கட்டுப்படவேண்டும் என்பது நியதி. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில், ஒவ்வொரு மாதமும் காவிரியில் எவ்வளவு நீரை கர்நாடகா திறந்து விட வேண்டும் என்றும், அந்த நீர் பில்லிகுண்டில் அளவீடு செய்யப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது.

அதன்படி இந்த ஆண்டு ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் ஆகஸ்டு 11-ந் தேதி வரையில் கர்நாடகா 53.7703 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்திற்கு வழங்கி இருக்க வேண்டும். ஆனால் கர்நாடக அரசு வழங்கி இருப்பதோ வெறும் 15.7993 டி.எம்.சி. தான். ஆக, நமக்கு ஏற்பட்டிருக்கிற பற்றாக்குறை 37.9710 டி.எம்.சி. நீராகும்.

பிரதமருக்கு கடிதம்

இதன் காரணமாக தஞ்சை தரணியில் காவிரி நீரை எதிர்பார்த்து நிற்கிற பயிர்கள் எல்லாம் காய்கின்ற நிலைமை ஏற்பட்டிருகிறது. தஞ்சை வரண்டால் தமிழ்நாடே வறண்டு போகும் என்பார்கள். எனவே நிலைமையை உணர்ந்து சுப்ரீம் கோர்ட்டினால் நியமிக்கப்பட்டுள்ள காவிரி நீர் ஒழுங்குமுறை குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆகிய இரண்டு அமைப்புகளும் விரைந்து செயல்பட வேண்டும் என்றும், அவர்கள் தமிழகத்திற்கு சேர வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசிடமிருந்து பெற்றுத்தர கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, நான் மத்திய நீர்வளத்துறை மந்திரியை இரண்டு முறை சந்தித்தேன்.

தமிழக முதல்-அமைச்சரும் பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய நீர்வளத்துறை மந்திரிக்கும் கடிதங்களை எழுதி நிலைமைகளை விளக்கி இருந்தார்.

வருத்தம்

ஆனாலும், அந்த இரண்டு அமைப்புகளும் உடனடியாக தன் பணிகளை ஆற்ற முன்வராமல் போனது மிகவும் வருத்தத்திற்குரியது. இறுதியாக நம்முடைய வற்புறுத்தலுக்கு இணங்கி 10-ந் தேதி (நேற்று முன்தினம்) நடந்த காவிரி நீர் ஒழுங்குமுறை குழு கூட்டத்தில் நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீரை 15 நாட்களுக்கு விடுவது என்று ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.

ஆனால் 11-ந் தேதி (நேற்று) நடத்த காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இது குறித்து 3 மணி நேரத்திற்கு மேல் விவாதிக்கப்பட்டிருக்கிறது. அக்கூட்டத்தில் தமிழகத்தின் தேவை கடுமையாக வலியுறுத்தப்பட்டது. ஆனால் கர்நாடகா சார்பில் வழக்கம் போல் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு 15 ஆயிரம் கன அடி அல்ல 8 ஆயிரம் கன அடி மட்டும்தான் அதுவும் வரும் 22-ந் தேதி வரையில்தான் தர முடியும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

வேறு வழியில்லை

கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லாத நிலை உள்ளதா என்றால் அப்படி அல்ல. கர்நாடகாவில் இருக்கிற 4 அணைகளையும் சேர்த்து மொத்த கொள்ளளவான 114.571 டி.எம்.சி.யில் 93.535 டி.எம்.சி. தண்ணீர் தேங்கிக்கிடக்கிறது. அதாவது கர்நாடகாவின் மொத்த இருப்பில் 82 சதவீதம் தண்ணீர் கர்நாடக வசம் இருப்பில் இருக்கிறது.

நீர் இல்லை என்ற நிலை கர்நாடகத்திற்கு இல்லை. தமிழகத்திற்கு தண்ணீர் தரவேண்டும் என்ற மனநிலையும் கர்நாடகத்திற்கு இல்லை. இந்த போக்கு இன்று நேற்றல்ல காவிரி வரலாற்றை அறிந்தவர்களுக்கு தெரியும். காவிரியில் கர்நாடக-தமிழ்நாடு பிரச்சினை என்றைக்கு தோன்றியதோ அன்றையிலிருந்து இந்த நிலையை கர்நாடக அரசு எடுத்து வருவது வருத்தத்திற்குரியது.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் உள்ளம் நமக்கு. பயிர்கள் காய்ந்தாலும் கவலை இல்லை என்ற உள்ளம் கர்நாடகத்திற்கு. எனவே, தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு போவதைத் தவிர வேறு வழியில்லை. விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்து, நீதி வென்று, நீரை பெற்று தருவோம் என்பதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சி உறுதியாக இருக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story