தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
பதவி உயர்வு பெறுவதில் உள்ள முரண்பாடுகளை களைய கோரி தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் சார்பில் பதவி உயர்வு பெறுவதில் உள்ள முரண்பாடுகளை களைய கோரி நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு செயலாளர் பிரம்மானந்தன், மகளிரணி தலைவர் சசிகலைகுமாரி, தலைமையிட செயலாளர் ஜோதிலட்சுமி, துணைத்தலைவர் ராமதாஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பாலமுருகன் வரவேற்றார்.
மாநில துணைத்தலைவர் தமிழ்செல்வன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சிவப்பிரகாசம், வேதபுரி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
இதில் தமிழகத்தில் மேல்நிலைக் கல்வி தொடங்கப்பட்டு 45 ஆண்டுகளாகியும் மேல்நிலை தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க பணி விதிகளில் வழிவகை செய்யப்படாமல் நீதி மறுக்கப்பட்டு வருகிறது.
பதவி உயர்வு வழங்க பணி விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும். செங்குத்து பதவி உயர்வு முறையை நடைமுறைப்படுத்தி பதவி உயர்வு பெறுவதில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும்.
மாணவர்களின் ஒழுங்கீனமான நடவடிக்கைகள் சார்ந்து அரசு விதிகளின்படி செயல்படும் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை முற்றிலும் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதில் மாவட்ட இணை செயலாளர் அன்பழகன், சட்ட செயலாளர் சீனிவாசன், கல்வி மாவட்டத்தலைவர் பாஸ்கரன், உமாமகேஸ்வரி, அய்யப்பன் உள்பட கல்வி மாவட்ட பொறுப்பாளர்கள், வட்ட பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் பெருமாள் நன்றி கூறினார்.