தமிழ்நாடு புத்தொழில் புத்தாக்க கொள்கை-2023: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்


தமிழ்நாடு புத்தொழில் புத்தாக்க கொள்கை-2023: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
x

தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை – 2023”னை வெளியிட்டு 8 நிறுவனங்களுக்கு ரூ.10.85 கோடி பங்கு நிதி வழங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை,

முதல்-அமைச்சர்மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தமிழ்நாட்டின் புத்தொழில் சூழமைவை மேம்படுத்தும் வகையில் 50-க்கும் மேற்பட்ட செயல் திட்டங்களை உள்ளடக்கிய "தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை – 2023"னை வெளியிட்டார். மேலும், தமிழ்நாடு பட்டியலினத்தவர் / பழங்குடியினர் புத்தொழில் நிதித்திட்டத்தின் கீழ் 8 நிறுவனங்களுக்கு 10 கோடியே 85 இலட்சம் ரூபாய் பங்கு நிதி வழங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளையும் வழங்கினார்.

தமிழ்நாட்டின் புத்தொழில் சூழமைவை (Startup Eco System) மேம்படுத்தும் வகையிலும், தமிழ்நாட்டினை மிகச் சிறந்த புத்தொழில் சூழமைவு கொண்ட இடங்களில் ஒன்றாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் "தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை – 2023" உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையானது 2030-க்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக தமிழ்நாட்டினை உருவாக்க வேண்டும் என்ற இலக்கினை அடைவதில் புத்தொழில் நிறுவனங்களின் பங்களிப்பினை ஊக்குவிப்பதற்கும் அடிப்படையாக இருக்கும்.

இப்புதிய புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கையானது, தமிழ்நாட்டில் உள்ள புத்தொழில் நிறுவனங்களின் உருவாக்கத்தை அதிகரிப்பதற்கும், அந்நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கு உறுதுணையாகவும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறியீடு (GDP) மற்றும் சமூக மூலதனம் (Social Capital) இரண்டிலும் அவற்றின் பங்களிப்புகளை அதிகரிப்பதற்கும் உந்து சக்தியாக இருக்கும்.

புத்தொழில் சார்ந்த அறிவாற்றலை மேம்படுத்துதல், மாநிலத்தின் புத்தாக்க சூழமைவினை வலுப்படுத்துதல், முதலீட்டு சூழமைவினை வலுப்படுத்துதல், சந்தை அணுகுதலுக்கு தேவையான வாய்ப்புகளை உருவாக்குதல், தொழில்முனைவு தளம் சார்ந்த செயல்பாட்டாளர்களை ஒருங்கிணைத்தல், புத்தொழில் ஆதரவு சேவை மையங்களை அமைத்தல் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த புத்தொழில் முனைவு வளர்ச்சியினை உறுதி செய்தல் ஆகிய ஏழு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு, 50-க்கும் மேற்பட்ட செயல்திட்டங்களுடன் இக்கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.

"தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை – 2023" சிறப்பம்சங்கள்

புத்தொழில் வரையறை திருத்தம்: தற்போது "புத்தொழில்" என்பதற்கான வரையறை அம்சங்களுடன், பட்டியலினத்தவர் / பழங்குடியின சமூகத்தினர், பிற துறைகளில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள புதுமையான மாதிரிகளை பயன்படுத்தி தாங்கள் சார்ந்த சமூகங்களின் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக ஒரு நிறுவனத்தினை உருவாக்கினால், அந்த நிறுவனமும் புத்தொழில் என்று மாநில அரசால் அங்கீகரிக்கப்படும்.

இணை நிதியம் (Co-Creation Fund): பிற துணிகர முதலீட்டு நிறுவனங்களின் (Venture capital firms) வழியாக முதலீடு செய்யும் பெரு நிதியம் (Fund of Funds) ஒன்று ரூ.100 கோடி மதிப்பில் உருவாக்கப்படும். இந்த பெரு நிதியமானது வட்டார அளவில் செயல்படும் புத்தொழில் நிறுவனங்கள், ஊரக வாழ்வாதார மேம்பாடு, பசுமைத்தொழில்நுட்பம் மற்றும் பெண்களால் நடத்தப்படும் புத்தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்வதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் தனியார் துணிகர முதலீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு சிறப்புரிமை அளிக்கும்.

ஸ்டார்ட்-அப் தமிழா: மாநிலத்தில் புத்தொழில் முனைவு மற்றும் முதலீட்டுப் பண்பாட்டினை பரவலாக்கும் விதமாக "ஸ்டார்ட் அப் தமிழா" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிக்கப்படும்.

ஸ்மார்ட் கார்டு: தொடக்க நிலையில் உள்ள புத்தொழில் நிறுவனங்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளை பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து நியாயமான விலையில் பெறக்கூடிய வகையில் அத்தகைய தொகுப்பு அடங்கிய ஸ்டார்ட் அப் ஸ்மார்ட் கார்ட் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

சமூக நீதி தொழில் வளர் மையம்: ஒடுக்கப்பட்ட சமூகங்களை சார்ந்தவர்களால் நடத்தப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு தேவையான பயிற்சிகள், ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை அளிக்கும் சமூக நீதி தொழில் வளர் மையம் நிறுவப்படும்.

பெண்களுக்கான சிறப்பு தொழில் வளர் மையம்: புத்தொழில் முனைவில் ஈடுபடும் பெண்களின் பிரத்யேக தேவைகளை கருத்தில் கொண்டு பல்வேறு சிறப்பம்சங்களுடன் ஒரு தொழில் வளர் மையம் அமைக்கப்படும்.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான திட்டங்கள்: மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களால் உருவாக்கப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் மானியம், டான்சீட் (Tanseed) திட்டத்தில் சிறப்புரிமை மற்றும் இலவச தொழில்வளர் காப்பான் போன்ற வாய்ப்புகள் வழங்கப்படும்.

டான் ஃபண்ட் (TANFUND): 'டான் ஃபண்ட்' என்ற பெயரில் உலகளாவிய துணிகர முதலீட்டாளர்களை தமிழ்நாட்டில் இயங்கும் புத்தொழில் நிறுவனங்களுடன் இணைக்கும் முதலீட்டு உதவித் தளம் தொடங்கப்படும்.

உலக சந்தைகள் ஒருங்கிணைப்பு: தமிழ்நாட்டில் இயங்கும் புத்தொழில் நிறுவனங்கள் வாய்ப்புகள் நிறைந்த பல்வேறு உலக நாடுகளிலும் கால் பதிக்க உதவும் வகையில் உலகிலுள்ள பல்வேறு முக்கிய நகரங்களிலும் புத்தொழில் ஒருங்கிணைப்பு மையங்கள் தொடங்கப்படும்.

மேலும், பெருநிறுவனங்களில் பணிபுரியும் அனுபவமும் ஆற்றலும் மிக்கவர்களை தொழில் முனைவோர்களாக மாற்ற உதவும் EIR (Entrepreneur-in-Residence) திட்டம், பல்வேறு தொழில்துறைகள் சார்ந்து இயங்கும் புத்தொழில் முனைவோர்களை அவர்கள் சம்பந்தப்பட்ட துறை வல்லுநர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பிற துறைசார் செயல்பாட்டாளர்களுடன் இணைக்கும் 'துறைசார் ஒருங்கிணைப்பு' திட்டம் என ஐம்பதுக்கும் மேற்பட்ட செயல் திட்டங்கள் இந்த கொள்கை வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பட்டியலினத்தவர் / பழங்குடியினர் புத்தொழில் நிதி

புதுயுக தொழில்முனைவில் அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியினை அடைவதற்காக தமிழ்நாடு அரசால் தமிழ்நாடு பட்டியலினத்தவர் / பழங்குடியினர் புத்தொழில் நிதித்திட்டம், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் வழியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தப் பிரிவுகளைச் சார்ந்த தொழில்முனைவோர்களால் தொடங்கி நடத்தப்பட்டு வரும் புத்தொழில் நிறுவனங்களுக்கு பங்கு முதலீடாக அல்லது பிணையில்லா கடனாக நிதி வழங்க கடந்த நிதி ஆண்டில் 30 கோடி ரூபாய் நிதியுடன் இந்த நிதியம் தொடங்கப்பட்டது. இந்த நிதி ஆண்டில் 50 கோடி ரூபாயாக இந்நிதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பட்டியலினத்தவர் / பழங்குடியினர் புத்தொழில் நிதி திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 8 புத்தொழில் நிறுவனங்களில் 10 கோடியே 85 இலட்சம் ரூபாய் பங்கு முதலீடு செய்வதற்கான ஒப்புதல் ஆணைகளை பயனாளிகளிடம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று வழங்கினார்.

அரசு முதலீடு செய்வதால் அந்த நிறுவனங்களின் மீதான நம்பகத்தன்மை அதிகரிப்பதோடு அவர்களின் சந்தை விரிவாக்கத்திற்கும் உறுதுணையாக இருக்கும். சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர், இராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த இந்த நிறுவனங்களில் 2 புத்தொழில் நிறுவனங்கள் பெண் தொழில்முனைவோர்களால் நடத்தப்படுகின்றது. பழங்குடியினரால் நடத்தப்படும் ஒரு புத்தொழில் நிறுவனமும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பதப்படுத்தப்பட்ட கருவாடு வகைகளை, அதன் மணம் வெளியில் வராத வண்ணம் தனித்துவமான பேக்கிங் செய்து சந்தைப்படுத்தும் லெமூரியன் நிறுவனம் (Lemurian Ventures), வேளாண் நிலங்களில் பயன்படுத்துவதற்கேற்ற டிரோன் கருவிகளை தயாரிக்கும் வாயுரதா (Vayuratha) நிறுவனம், சினிமா தயாரிப்பு துறையில் நவீன தொழில்நுட்பத்தினை கொண்டியங்கும் 70 எம்.எம் டிஜிவெர்ஸ் (70 mm Digiverse) நிறுவனம், காய்கறிகளை கொண்டு மால்ட் உணவு வகைகளை தயாரிக்கும் வேர்வை புட்ஸ் (Vervai foods) நிறுவனம், தோடா பழங்குடியினரின் கைவேலைப்பாடு செய்த துணிகளை இணைய வழியில் சந்தைப்படுத்தும் ஐ கேம் டெக்னாசிஸ் (Icam Technosys) நிறுவனம், உற்பத்தி துறையில் இயங்கும் KSU ஹார் நெக்ஸன் (KSU Harnexon) நிறுவனம், ஐஓடி தொழில்நுட்ப துறையில் இயங்கும் என்ந்து டெக்னாலஜிஸ் (Enthu Technologies) மற்றும் ஆக்கம் டெக்னாலஜிஸ் (Auckam Technologies) ஆகிய எட்டு நிறுவனங்களுக்கு பங்கு முதலீட்டு ஒப்புதல் ஆணைகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் .தா.மோ. அன்பரசன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் (பொறுப்பு) அருண் ராய், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் சிவராஜா இராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story