காவல்துறை கையை கட்டிப்போட்டதால் ஏற்பட்ட விளைவை தமிழகம் சந்திக்கிறது -அண்ணாமலை குற்றச்சாட்டு


காவல்துறை கையை கட்டிப்போட்டதால் ஏற்பட்ட விளைவை தமிழகம் சந்திக்கிறது -அண்ணாமலை குற்றச்சாட்டு
x

“காவல்துறை கையை கட்டிப்போட்டதால் ஏற்பட்ட விளைவை தமிழகம் சந்திக்கிறது” என்று அண்ணாமலை குற்றம்சாட்டினார்.

மதுரை,

பா.ஜனதா கட்சி சார்பில் "எனது பூத், வலிமையான பூத்" என்ற திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

மதுரையில் இந்த திட்டத்தை மாநில தலைவர் அண்ணாமலை நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மன்மோகன்சிங் பிரதமராக இருந்த காலத்தில் இந்தி என்பது கட்டாய மொழிப்பாடமாக இருந்தது. ஆனால் பிரதமர் மோடியின் ஆட்சியில்தான் இந்தி 3-வது பாட விருப்பமொழி தேர்வாக உள்ளது. தமிழகத்தில் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்த தொடங்கி விட்டார்கள்.

தமிழை வளர்க்கும் லட்சணம்

இல்லம் தேடி கல்வி உள்பட திட்டத்தின் பெயரை மாற்றி கல்வி கொள்கையை அமல்படுத்தி கொண்டு இருக்கிறார்கள். மருத்துவத்தையும், என்ஜினீயரிங் படிப்பையும் தமிழில் கொண்டு வர வேண்டும். ஆனால் அமைச்சர் பொன்முடி, என்ஜினீயரிங் படிப்பு தமிழில் இருப்பதாக கூறினார். ஆனால் 1 லட்சம் பேர் படிக்கும் என்ஜினீயரிங் படிப்பில் வெறும் 69 பேர் தான் தமிழில் படிக்கிறார்கள். அதுவும் 5 கல்லூரிகளில்தான் இருக்கிறது. இதுதான் தி.மு.க. தமிழை வளர்க்கும் லட்சணம்.

கோவையில் குண்டு வெடித்தவுடன், பா.ஜனதாதான் அது சதி திட்டம் என தெளிவாக கூறியது. ஆனால் தமிழக அரசு, அது வெறும் சிலிண்டர் விபத்து என்று கூறிக்கொண்டு இருந்தார்கள். நாங்கள் மட்டும் இந்த விவகாரத்தில் மக்களிடம் செல்லாமல் இருந்தால், இறந்த முபின் குடும்பத்திற்கு தி.மு.க., அரசு வேலை கொடுத்து இருப்பார்கள்.

தி.மு.க. ஆட்சியில் மதுவுக்கும், கஞ்சாவுக்கும் இளைஞர்கள் அடிமையாகி விட்டார்கள். காவல்துறையின் கையை கட்டி போட்டுவிட்டார்கள். சுதந்திரமாக செயல்பட்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். காவல்துறையின் கையை கட்டி போட்டால் விபரீதம் மிக மோசமாக இருக்கும். அதன் விளைவுகளைதான் தமிழகம் தற்போது சந்தித்து கொண்டு இருக்கிறது. இன்னும் தி.மு.க. ஆட்சியில் என்னென்ன பிரச்சினைகள் வரப்போகிறதோ என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story