பல்வேறு துறைகளில் முன்னேறிய மாநிலங்களில் தமிழகம் முதலிடம்


பல்வேறு துறைகளில் முன்னேறிய மாநிலங்களில் தமிழகம் முதலிடம்
x

பல்வேறு துறைகளில் முன்னேறிய மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என நாகை மீன்வள பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என். ரவி கூறினார்.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

பல்வேறு துறைகளில் முன்னேறிய மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என நாகை மீன்வள பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என். ரவி கூறினார்.

பட்டமளிப்பு விழா

நாகையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப்பல்கலைக்கழக 7-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. பல்கலைக்கழக துணைவேந்தர் சுகுமார் வரவேற்றார். மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மத்திய வேளாண் பல்கலைக்கழக வேந்தர் அய்யப்பன் ஆகியோர் பேசினர்.

விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு 339 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

உலக பொருளாதாரம்

இன்று பட்டம் பெறும் உங்களை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த பட்டம் பெற உதவிய உங்களது பெற்றோர், ஆசிரியர் ஆகியோரை மறந்து விடக்கூடாது. உலக பொருளாதாரம் வேகமாக முன்னேறி செல்கிறது. அதே வேகத்தில் நாமும் முன்னேறி செல்ல வேண்டும்.

நமது நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளில் பல சாதனைகளை படைத்துள்ளோம். அடுத்து வர உள்ள 25 ஆண்டுகளில் இதை விட அதிக சாதனைகளை படைக்க வேண்டும். அதற்கு உங்களைப்போன்ற இளம் தலைமுறையினர் கடுமையாக உழைக்க வேண்டும். நாட்டின் முன்னேற்றத்திற்கு இளைஞர்கள் பொறுப்பேற்க வேண்டும்.

மீன்வளத்தின் பங்கு முக்கியம்

பொருளாதாரத்தில் மீன்வளத்தின் பங்கு முக்கியமானதாக உள்ளது. மகளிர் மேம்பாடு, தொழில்துறை, உள்கட்டமைப்பு வசதி ஆகியவற்றில் தமிழகம் நமது நாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது.

நாம் நிறைய சாதனைகள் செய்திருந்தாலும் விரைவான கட்டத்தில் நாம் அதிகம் சாதிக்க வேண்டும். இதற்கு நாம் மிக வேகமாக செல்ல வேண்டும். விவசாயத்தில் எந்த அளவிற்கு புரட்சி செய்துள்ளோமோ அதேபோல் மீன் பிடிப்பதிலும் செய்ய வேண்டும்.

தமிழகம் முதலிடம்

எந்த செயலை செய்தாலும் அது மற்றவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் செய்ய வேண்டும். மீன்பிடித்துறை வளர்ச்சியடையும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆந்திரா, மேற்கு வங்காளம் போன்ற பல மாநிலங்கள் மீன்பிடித்துறையில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதை பார்க்கிறோம். ஆனால் நாம் அவர்களுக்கு பின்னால் இருக்க என்ன காரணம் என யோசித்து நிவர்த்தி செய்ய வேண்டும்.

பொருளாதாரத்தில் ஒவ்வொரு துறையும் பங்களிக்கும்போதுதான் இந்த லட்சியம் சாத்தியமாகும். மீன்வளமும் இதற்கு ஒரு பெரிய பங்கு வகிக்கிறது. மீன்பிடித்துறையில் இன்னும் அதிகமான கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய தொழில்கள் ஏற்படுத்த வேண்டும். பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூடுதலாக 5 விருதுகள்

விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

நாகையில் உள்ள இந்த பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகளுக்கு 70 விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் நடப்பு கல்வியாண்டு முதல் கூடுதலாக 5 விருதுகள் வழங்கப்பட உள்ளது.

இங்கு பட்டம் பெற்று வெளியில் செல்லும் மாணவ, மாணவிகளுக்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் சார்பில் நான் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

விழாவில் நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், தாட்கோ தலைவர் மதிவாணன், எம்.எல்.ஏ.க்கள் நாகை மாலி, நிவேதா முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பட்டமளிப்பு விழாவிற்கு தமிழக கவர்னர் வருகை தந்ததால் நாகையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story