கடன் வாங்குவதில் தமிழகம் முதலிடம்..எவ்ளோ கோடி தெரியுமா..?


கடன் வாங்குவதில் தமிழகம் முதலிடம்..எவ்ளோ கோடி தெரியுமா..?
x
தினத்தந்தி 1 Jun 2023 4:42 PM IST (Updated: 1 Jun 2023 4:44 PM IST)
t-max-icont-min-icon

2022-23ல் கடன் வாங்குவதில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களும் நலத்திட்டஙகளை செயல்படுத்த கடன் வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளன. அதன்படி ரிசர்வ் வங்கி மூலம் சந்தைகளில் இருந்து கடன் பத்திரங்கள் வாயிலாக மாநிலங்கள் நிதி திரட்டுகின்றன. அதற்கான வட்டி சந்தை நிலவரப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்த வகையில் நிதி நிலைமை வலுவாக இருக்கும் மாநிலங்கள் குறைந்த வட்டியிலும், நிதி நிலை பலவீனமாக உள்ள மாநிலங்கள் அதிக வட்டியிலும் கடன் பெறுகின்றன. இந்நிலையில் தான் 2022-23ம் நிதியாண்டின் முடிவில் அதிக கடன் பெற்ற மாநிலங்களின் பட்டியல் இந்திய ரிசர்வ் வங்கியின் தரவில் உள்ளது.

அதன்படி பார்த்தால் 2022-23 நிதியாண்டின் முடிவில் அதிக கடன் பெற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

இந்த 2022-23 நிதியாண்டில் தமிழ்நாட்டின் கடன் ரூ.87,000 கோடியாக உள்ளது. இது கடந்த 2021-22ம் ஆண்டில் இருந்து அப்படியே தொடர்ந்து வருகிறது.

இந்த பட்டியலில் 2வது இடத்தில் சிவசேனா-பாஜக ஆளும் மராட்டியம் மாநிலம் உள்ளது. இந்த மாநிலத்தின் கடன் ரூ.72,000 கோடியாக உள்ளது. இந்த பட்டியலில் 3வது இடத்தில் ரூ.63 ஆயிரம் கோடி கடனுடன் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஆளும் முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் மேற்கு வங்க மாநிலம் உள்ளது.

4வது இடத்தில் நமது அண்டை மாநிலமான முதல்-மந்திரியாக உள்ள ஜெகன் மோகன் ரெட்டியன் ஆந்திர மாநிலம் உள்ளது. இந்த பட்டியலில் 5வது இடத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் உத்திர பிரதேசம் மாநிலம் உள்ளது. உத்தர பிரதேசத்தின் கடன் மதிப்பு ரூ.55,612 கோடியாக இருக்கிறது.

இதில் தமிழ்நாடு உள்பட பிற மாநிலங்கள் மாநில வளர்ச்சிக் கடன் எனப்படும் ஏல பத்திரங்கள் மூலம் கடன் வாங்குகின்றன. தணிக்கை செய்யப்படாத சிஏஜி புள்ளிவிபரங்களின் படி தமிழ்நாட்டின் வரி வருவாய் 2021-22ல் ரூ.1,60,324.66 கோடியிலிருந்து 2022-23ல் 18 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

இதன்மூலம் தமிழ்நாட்டுக்கான வரி வருவாய் ரூ.1,88,953.57 கோடியாக உயர்ந்துள்ளது. இருப்பினும் வருவாய்க்கான செலவு என்பது தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது. அதன்படி 2021-22ல் ரூ.2,47,5,79.99 கோடியாக இருந்த வருவாய் செலவீனம், 2022-23ல் ரூ.2,69,562.94 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்த வருவாய் செலவினங்களில் அரசு ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம், பிற ஓய்வூதிய பலன்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.



Next Story