இந்தியாவிலே அதிக கடன் வாங்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது- ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு


இந்தியாவிலே அதிக கடன் வாங்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது- ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
x

இந்தியாவிலே அதிக கடன் வாங்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கும் திட்டம் குறைபிரசவமாக உள்ளது என்று ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டி உள்ளார்.

மதுரை


இந்தியாவிலே அதிக கடன் வாங்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கும் திட்டம் குறைபிரசவமாக உள்ளது என்று ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டி உள்ளார்.

விலைவாசி உயர்வு

மதுரையில் அடுத்த மாதம் 20-ந் தேதி நடைபெறும் அ.தி.மு.க. மாநில மாநாட்டினை முன்னிட்டு சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டின் பேரில் 1 லட்சம் பேருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன் முன்னிலை வகித்தார். ஆர்.பி.உதயகுமார் மரக்கன்றுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜெயலலிதா பேரவை சார்பில் மதுரை பட்டினத்தை, பசுமை பட்டினமாக்கும் வகையில் அ.தி.மு.க. மாநாட்டிற்கு மரக்கன்று கொடுத்து அழைக்கப்பட்டு வருகிறது. இதே மதுரையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் மாநாட்டினை வெற்றிகரமாக நடத்தி இருக்கின்றனர். அவர்களது வழியில் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாநாடு சிறப்பாக நடைபெறும். தமிழகத்தில் கடுமையான விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகி விட்டது. இந்த தி.மு.க.வின் குடும்ப ஆட்சிக்கு, சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி மலர, இந்த மாநாடு அடித்தளம் அமைக்கும். உதயநிதி வந்த பின்பு தான் விளையாட்டு துறையில் புத்துணர்ச்சி ஏற்பட்டதாக மு.க.ஸ்டாலின் கூறுகிறார். எந்த புத்துணர்ச்சியும் ஏற்படவில்லை. உதயநிதியை புகழ்வதையே அமைச்சர்கள் கடமையாக வைத்திருக்கிறார்கள். தற்போது முதல்-அமைச்சரும் புகழ்கிறார். உதயநிதியின் விளையாட்டுத்துறை செயல்படாத துறையாக இருக்கிறது. தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் கூட தமிழக மாணவர்கள் பங்கேற்க முடியவில்லை.

குறை பிரசவம்

உதயநிதியின், நண்பராக இருக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் துறையும் செயல் இழந்து விட்டது. கடந்த ஆண்டு பிளஸ்-2 வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. 10-ம் வகுப்பு மாணவர்கள் 50 ஆயிரம் பேர் தேர்வு எழுதவில்லை. தமிழகத்தில் தக்காளி விலை உயர்ந்து விட்டது. அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமை திட்டம் குறை பிரசவமாகும். இந்த திட்டத்திற்கு கருணாநிதி பெயரை சூட்டியுள்ளனர். இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் தமிழகம் தான் முதல் இடத்தில் உள்ளது என்று நாடாளுமன்றத்தில், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். அந்த குற்றச்சாட்டிற்கு இதுவரை மு.க.ஸ்டாலின் பதில் கூறவில்லை. தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவது வேதனை அளிக்கிறது. தி.மு.க மற்றும் அதன் கூட்டணி எம்.பி.க்கள் தமிழகத்தின் வளர்ச்சிக்காக எதுவும் போராடவில்லை, குரல் கொடுக்கவில்லை. இன்றைக்கு தி.மு.க. ஆட்சி, கண்டத்தில் இருக்கிறது. வருமான வரி மற்றும் அமலாக்கத்துறை சோதனையில் சிக்கி தவிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தமிழரசன், எஸ்.எஸ்.சரவணன், ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சிவசுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் திருப்பதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story