தமிழகம் குட்டி ஜப்பானாக மாறுகிறது


தமிழகம் குட்டி ஜப்பானாக மாறுகிறது
x
தினத்தந்தி 10 July 2023 3:45 AM IST (Updated: 10 July 2023 3:45 AM IST)
t-max-icont-min-icon

தொழில் வளர்ச்சியில் தமிழகம் குட்டி ஜப்பானாக மாறுகிறது என்று பாராட்டு விழாவில் ஜார்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கோயம்புத்தூர்

தொழில் வளர்ச்சியில் தமிழகம் குட்டி ஜப்பானாக மாறுகிறது என்று பாராட்டு விழாவில் ஜார்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பாராட்டு விழா

கோவை கொடிசியாவில் ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசும்போது கூறியதாவது:-

தமிழகத்தை சேர்ந்த ஒருவர் பிரதமராக இருந்தால் கூட தமிழகத்தில் இருந்து 3 பேரை கவர்னர்களாக நியமனம் செய்து இருக்கமாட்டார். ஆனால் பிரதமர் மோடி தமிழகத்தை சேர்ந்த 3 பேரை கவர்னர்களாக நியமித்து சாதித்து உள்ளார்.

நான் கவர்னராக பதவி வகிப்பது கொங்கு மண்ணிற்கும், தமிழ் மண்ணிற்கும் கிடைத்த பெருமை. நான் கடந்த 1998-2004 என 2 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தேன்.

அப்போது கோவைக்கு கொங்கு விரைவு ரெயில், திலகர் விரைவு ரெயில், மயிலாடுதுறை விரைவு ரெயில் என 7 புதிய ரெயில்கள் கொண்டு வந்தும், அடுத்த தேர்தலில் தோல்வியடைந்தேன். சாதனையை மக்களிடம் கொண்டு செல்வதே வெற்றியை தரும்.

பிரதமா் மோடியின் தீவிர முயற்சியால் இந்தியா பொருளாதார நாடாக வளர்ந்து உள்ளது. தொழில் வளர்ச்சியில் மற்றும் தொழில்நுட்பத்தில் தமிழகம் குட்டி ஜப்பானாக மாறி வருகிறது.

இவ்வாறு கவா்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.

எளிமையாக இருக்கிறார்

விழாவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டுக் பூங்கொத்து கொடுத்து கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்து பேசும்போது கூறியதாவது:-

சி.பி.ராதாகிருஷ்ணன் கவர்னர் ஆனது கோவை மாவட்டத்திற்கு பெருமை என்பதால் பாராட்டு விழாவில் பங்கேற்க வந்தேன்.

முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் என்னை கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பாராட்டு விழாவில் பங்கேற்று தனது வாழ்த்தை கூறுமாறு சொன்னார்.

சி.பி.ராதாகிருஷ்ணன் அனைவரையும் ஒன்றிணைத்து அரவணைத்து செல்வார். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அன்பை பெற்றவர். கவர்னராக இருந்த போதும் கூட எளிமையாக இருக்கிறார்.

கோவை விமான நிலையம் விரிவாக்கம் நில எடுப்பு நடந்து வரும் நிலையில், அதனை வேகமாக முடித்து தர மத்திய அரசிடம் அறிவுறுத்த வேண்டும். மில் சம்மந்தப்பட்ட தொழில்கள் கோவையில் அதிகம். மில் தொழில்களுக்கு மத்திய அரசு சலுகைகள் பெற்று தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுனன், செ.தாமோதரன், ஏ.கே.செல்வராஜ், சூலூர் கந்தசாமி, கே.ஆர்.ஜெயராம் மற்றும் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் சாந்திமதி தோப்பு அசோகன், பா.ஜ.க. மாநில விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ், ம.தி.மு.க. மாநில நிர்வாகி ஆர்.ஆர்.மோகன்குமார், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், கொடிசியா தலைவர் திருஞானம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story