தமிழகம் ஆயுதப் பூங்காவாக மாறுகிறது
தமிழகம் ஆயுத பூங்காவாக மாறி வருகிறது என்று இந்து முன்னணி மாநில செயலாளர் முருகானந்தம் கூறினார்.
இந்து முன்னணி மதுரை கோட்ட பொதுக்குழு கூட்டம் தேனியில் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் கலந்துகொண்டு பேசினார். மேலும் இக்கூட்டத்தில் மாநில இணை அமைப்பாளர் பொன்னையா, மாநில செயலாளர்கள் முத்துக்குமார், செந்தில்குமார், தேனி மாவட்ட பொதுச்செயலாளர் முருகன், மாவட்ட செயலாளர் உமையராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக, மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், "இந்த மதுரை கோட்ட பொதுக்குழு கூட்டத்தில் தேனி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். நகரில் உள்ள அனைத்து வார்டு, அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இந்து மதத்தை பாதுகாக்க ஒரு குழு உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பொதுக்குழு நடத்தப்பட்டது. மதம் மாறுவதை தடுக்க வேண்டும். மதமாற்ற பிரசாரம் செய்பவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இந்து கோவில்களை பாதுகாக்க வேண்டும். இந்து கோவில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பொதுக்குழு நடந்தது. தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு இந்து மதத்துக்கு எதிரான தாக்குதல் அதிகரித்துள்ளது. இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கு கடுமையாக நெருக்கடி கொடுக்கிறார்கள். நாம் சில உண்மையான கருத்துக்களை கூறினால் கூட வழக்குப்பதிவு செய்கிறார்கள். ஆனால், இந்து மதம் குறித்து இழிவாக பேசினால் வழக்குப்பதிவு செய்வது இல்லை. தி.மு.க. அரசு இந்துக்களுக்கு விரோதமான அரசாக செயல்படுகிறது. தமிழ்நாடு அமைதிப் பூங்கா என்று சொல்கிறார்கள். ஆனால், ஆயுதப்பூங்காவாக மாறிக் கொண்டிருக்கிறது. அதற்கு இந்த அரசு மறைமுகமாக உதவி செய்கிறது. நாட்டுக்கு விரோதமாக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது இல்லை. உளவுத்துறை கவனமாக இருந்து நாட்டுக்கு விரோதமாக இருப்பவர்களை கண்டறிந்து அவர்களை தடுக்க வேண்டும்" என்றார்.