தமிழக கபடி அணி வீரர்கள் பயிற்சி
வாலிநோக்கம் கடற்கரையில் தமிழக கபடி அணி வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கபடி அணியின் தலைவர் ரமேஷ்கண்ணன் ராமநாதபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கபடி அணி கடந்த 4 முறை நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இதனை தொடர்ந்து வருகிற 11, 12, 13-ந் தேதிகளில் மாற்றுத்திறனாளிகள் ஆல் இந்தியா சாம்பியன்ஷிப் கபடி போட்டி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளி கபடி அணி கலந்து கொள்கிறது.
இதற்காக ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் கடற்கரையில் தமிழக அணி வீரர்களுக்கு பயிற்சி நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து அக்டோபர் மாதத்தில் தென் இந்தியா அளவிலான மாற்றுத்திறனாளிகள் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியை ராமநாதபுரம் மாவட்டத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் தமிழக மாற்றுத்திறனாளிகள் அணி வீரர்கள் தேர்வு ராமநாதபுரத்தில் அடுத்த மாதம் 9, 10-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளை ராமநாதபுரத்தில் நடத்துவதற்காக கலெக்டரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். அப்போது தமிழக மாற்றுத்திறனாளிகள் அணி கேப்டன் மகேஷ், துணை கேப்டன் ரமேஷ் மற்றும் அணி வீரர்கள் பிரவீன், சரவணன், மோகன், அன்பு ஆகியோர் உடன் இருந்தனர்.