தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் நூதன போராட்டம்
நெல்லையில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் நூதன போராட்டம் நடத்தினர்.
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் நெல்லையில் நேற்று முதல்-அமைச்சருக்கு அல்வா அனுப்பும் நூதன போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். அதன்படி மாநில மாணவர் அணி செயலாளர் அப்துல் அஜீஸ் தலைமையில் கலெக்டர் அலுவலகம் நோக்கி புறப்பட்டனர். ஆனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து மேலப்பாளையம் சந்தை முக்கில் அல்வா பார்சல்களை கையில் வைத்துக்கொண்டு போராட்டத்தை தொடங்கினார்கள். இதில் மாநில செயலாளர் உமர் பாரூக், தென் மண்டல செயலாளர் அப்துல் ஜப்பார், நெல்லை மாவட்ட செயலாளர் ஜமால், துணை செயலாளர் முத்துவீரன், பொருளாளர் ஜாபர், மேலப்பாளையம் பகுதி பக்ருதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆனால் போலீசார் அங்கும் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மேலப்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். முதல்-அமைச்சருக்கு அல்வா அனுப்பும் நிகழ்வை அனுமதிக்க முடியாது என்று கூறினார்கள். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.
இதுகுறித்து த.ம.ஜ.க. நிர்வாகிகள் கூறுகையில், "தி.மு.க தேர்தல் அறிக்கையில் 20 ஆண்டுகள் சிறையில் இருக்கும் முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என அறிவித்திருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் முடிந்த பிறகும் அதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் அறிக்கையில் சொன்னதை நிறைவேற்றாமல் அல்வா கொடுக்கிறார்கள். எனவே முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டோம்'' என்றனர்.