தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்
ஈரோடு மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஏ.செல்வராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மயில்துரையன் முன்னிலை வகித்தார்.
பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் கிராமத்தில் செல்வம் மாரியம்மன் கோவில் விழாவில் கலந்து கொண்ட த.ம.மு.க. தலைவர் பெ.ஜான்பாண்டியன் மீதும், தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த 28 பேர் மீதும் பொய் வழக்கு போட்டுள்ள பெரம்பலூர் மாவட்ட போலீஸ் துறையை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், போலீஸ் அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.
அதைத்தொடர்ந்து, தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் பெ.ஜான்பாண்டியனுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி, மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் மனுவும் கொடுத்தனர்.
இதில் கொடுமுடி ஒன்றிய தலைவர் சக்திவேல், சத்தியமங்கலம் ஒன்றிய செயலாளர் ராஜீவ் காந்தி, பவானிசாகர் ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், மாநகர வார்டு செயலாளர் துரைசாமி ஈஸ்வரன், பவானி நகர பொறுப்பாளர் வேல்முருகன் ராதா, மாநகர வார்டு செயலாளர் நல்லசிவம் ரஞ்சித், பள்ளிபாளையம் ஒன்றிய பொறுப்பாளர் சுப்பிரமணி செல்வம், மருதமுத்து, மகளிர் அணி பொறுப்பாளர் சத்யா, அன்னக்கொடி, மயிலாள் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.