தமிழக மக்கள் நல்வாழ்வு துறைக்கு விருதுகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சிறப்பான செயல்பாடுகளுக்காக மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு விருதுகள் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தாா்.
சென்னை,
தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சிறப்பான செயல்பாடுகளுக்காக 2021-ம் ஆண்டு மே மாதம் முதல் இதுவரை வழங்கப்பட்ட விருதுகளை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். அப்போது துறை அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
நாட்டிலேயே அதிகபட்சமாக தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகள் மேற்கொண்டது; அதிக எண்ணிக்கையில் ஆரோக்கிய அமர்வுகளை நடத்தியது; காசநோயின் பாதிப்பை 20 சதவீதம் குறைத்தது;
உணவு வணிகங்களுக்கான உரிமம், பதிவுச்சான்று வழங்குதல் மற்றும் உணவு மாதிரிகள் எடுத்து கண்காணித்தல், பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவு வழங்குவது குறித்து தர மதிப்பீடு செய்தல் மற்றும் சான்று வழங்குதல், தரமான, பாதுகாப்பான, செறிவூட்டப்பட்ட, ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவு பழக்கத்தை ஏற்படுத்துதல், உணவு உட்கொள்ளும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்துதல் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் தொடர்பாக உண்ணத் தகுந்த உணவு குறித்த போட்டியில் வெற்றி;
நவீன கருத்தடை சாதனம்
பேறுகாலத்திற்கு பின் பெண்களுக்கு பொருத்தப்படும் தற்காலிக நவீன கருத்தடை சாதனம் தொடர்பான சாதனையில் அகில இந்திய அளவில் முதலிடம்; கர்ப்பிணி பெண்களுக்கான ஹெப்படைடிஸ்-பி பரிசோதனைகளுக்கான ஒருங்கிணைந்த சுகாதார சேவைகள்; தேசிய தர உறுதி நிர்ணய திட்டத்தை அரசு சமுதாய சுகாதார மையங்களில் செயல்படுத்தியது;
அனைவருக்கும் நலவாழ்வு மையங்கள் மூலம் தொலை தொடர்பு மருத்துவ ஆலோசனைகள் வழங்கி இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம் பெற்றது; பிரதான் மந்திரி சுரஷத் மாத்ரித்வா அபியான் திட்டம் சிறப்பாக செயல்படுத்தியது; சுரஷத் மாத்ரித்வா ஆஷ்வாசன் திட்டம் செயல்பாடு; ஸ்கோச் விருது; அரசு மருத்துவ நிலையங்களில் டயாலிசிஸ் சேவை;
மிகச்சிறந்த மாதவிடாய் கால தன் சுத்த இயக்கத்தை நடத்தியது; தேசிய இளம் சிறார் நலத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியது; காசநோய் இல்லாத நிலையை நோக்கி முன்னேறி வருவது; மனித வளம் மற்றும் நிறுவனங்களைப் பற்றிய தரவுகள், தர நிர்ணய விதிமுறைகளைப் பின்பற்றுதல் உள்ளிட்ட அம்சங்களில் சிறந்த செயல்பாடு;
வாழ்த்து
'ஈட் ரைட் சேலஞ்ச்' போட்டியில் இந்திய அளவில் வெற்றி; தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று சிசிக்சை நிறுவனத்தால், உறுப்பு மாற்று சிகிச்சையில் சிறந்த செயல்பாட்டிற்கான இந்திய அளவில் சிறந்த மாநிலமாக தேர்வு; ஆயுஷ்மான் பாரத் பிரதமர் மக்கள் ஆரோக்கிய திட்டத்தில் சிறந்த சேவை; நட்புடன் உங்களோடு மனநல சேவை தொலைபேசி வழி மனநல சேவை வழங்குவதில் தமிழ்நாடு முதலிடம் ஆகிய சாதனைகளுக்காக பல்வேறு காலகட்டங்களில் தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு விருதுகள் வழங்கப்பட்டு இருந்தது. இந்த விருதுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
இந்த நிகழ்வின்போது, தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா, மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச்செயலாளர் ககன்தீப்சிங் பேடி, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் லால்வேனா, தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் கோவிந்த ராவ், மருத்துவக் கல்வி இயக்குனர் சாந்திமலர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் சண்முககனி, நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், குடும்ப நலத்துறை இயக்குனர் ஹரி சுந்தரி, மாநில காசநோய் கூடுதல் இயக்குனர் (காசநோய்) ஆஷா பிரடெரிக் ஆகியோர் கலந்துகொண்டனர்.