தமிழக காவல்துறையில் பொன் விழா கொண்டாடும் பெண் போலீஸ்; முதல்-அமைச்சர் தலைமையில் பிரமாண்ட நிகழ்ச்சி
தமிழக காவல்துறையில் பெண் போலீசார் பொன் விழா கொண்டாடுகிறார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னையில் கோலாகல விழா நடக்கிறது.
சென்னை,
தமிழக காவல் துறையில் இந்த ஆண்டு மாபெரும் முத்திரை பதிக்கும் ஆண்டு ஆகும். ஆம், பெண் போலீசின் பொன் விழா ஆண்டு ஆகும். 1973-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதிதான் தமிழக காவல் துறையில் பெண் போலீசின் முதல் காலடிச்சுவடை பதிக்க வைத்தார்.
அவர் தொடங்கி வைத்த பெண் போலீஸ் 50 ஆண்டுகளை தொட்டு இன்று ஆண் போலீசுக்கு இணையாக, பெரிய ஆலமரமாக வளர்ந்து நிமிர்ந்து கம்பீரமாக நிற்கிறார்கள்.
35 ஆயிரம் பேருடன்....
1973-ம் ஆண்டு முதல்-முதலில் பெண் போலீஸ் தொடங்கியபோது ஒரு சப்-இன்ஸ்பெக்டர், ஒரு ஏட்டு, 20 போலீசார் அடங்கிய சிறிய படைதான் இருந்தது. அந்த பெண் போலீஸ் படைக்கு முதல் சப்-இன்ஸ்பெக்டராக தலைமை தாங்கும் பொறுப்பை உஷாராணி பெற்றார். 22 பேருடன் தொடங்கப்பட்ட பெண் போலீஸ், தற்போது 35 ஆயிரத்து 329 பேருடன் தலை நிமிர்ந்து நிற்கிறது.
1 டி.ஜி.பி., 2 கூடுதல் டி.ஜி.பி.க்கள், 14 ஐ.ஜி.க்கள் இந்த பெண் போலீசில் அணிவகுத்து நிற்கிறார்கள். 1992-ம் ஆண்டில் சென்னையில் ஆயிரம் விளக்கில் முதல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டது. அந்த போலீஸ் நிலையத்தில் முதல் இன்ஸ்பெக்டராக சிசிலி பதவி ஏற்றார். 2004-ம் ஆண்டு அதே ஜெயலலிதாவால், பெண் போலீஸ் பட்டாலியன் தொடங்கப்பட்டது. இந்த பெண் போலீஸ் பட்டாலியனில் பெண் போலீஸ் கமாண்டோ படை, அதிவிரைவு படை போன்றவையும் அடங்கும்.
திலகவதி - லத்திகாசரண்
1976-ல் தமிழகத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியாக திலகவதி தேர்வு பெற்று சாதனை படைத்தார். தமிழகத்தின் முதல் பெண் டி.ஜி.பி. என்ற பெருமை பெற்றவர் லத்திகாசரண். சென்னையின் முதல் பெண் கமிஷனரும் இவர்தான். இந்த பெருமையை லத்திகாசரணுக்கு வழங்கியவரும் முதல்-அமைச்சர் கருணாநிதிதான்.
தமிழக போலீஸ் பிரிவைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம் டெல்லியில் சி.பி.ஐ. போலீசில் கூடுதல் இயக்குனராக பணியாற்றி பெருமை சேர்த்தார்.
சென்னையில் முதல் பெண் உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டவர் ஜெயகவுரி. இப்படியாக சிறிது சிறிதாக உயர்ந்த பெண் போலீஸ் தமிழகத்தின் அனைத்து போலீஸ் பிரிவுகளிலும் வியாபித்து நிற்கிறார்கள். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் காவல் பணியை பெண் போலீசார்தான் முழுக்கமுழுக்க முன்நின்று செய்கிறார்கள். 'கரண்டி பிடிக்கும் கை' என்று பேசப்பட்ட பெண் போலீசார்தான் துப்பாக்கியை கையில் ஏந்தி காவல் பணி செய்கிறார்கள்.
லஞ்ச ஒழிப்பு துறையில்...
லஞ்ச ஒழிப்பு துறையில் 3 ஐ.ஜி.க்களில் பவானீஸ்வரி, லலிதா லட்சுமி ஆகிய இருவரும், டி.ஐ.ஜி.யாக லட்சுமியும், சூப்பிரண்டுகளாக விமலா, சியாமளாதேவி ஆகியோரும் கோலோச்சுகிறார்கள். ரெயில்வே போலீசுக்கு கூடுதல் டி.ஜி.பி.யாக வனிதா தலைமை தாங்கி நிற்கிறார். போலீசாரை தேர்வு செய்யும் சீருடை பணியாளர் தேர்வாணய டி.ஜி.பி.யாக சீமாஅகர்வால் பெருமை சேர்க்கிறார். சேலம் கமிஷனராக விஜயகுமாரி, திருச்சி கமிஷனராக சத்தியபிரியா, சேலம் சரக டி.ஐ.ஜி.யாக ராஜேஸ்வரி பணியில் உள்ளனர்.
சென்னையில் மத்திய குற்றப்பிரிவில் கூடுதல் கமிஷனர் மகேஷ்வரி, துணை கமிஷனர்களாக நாகஜோதி, மீனா, கூடுதல் துணை கமிஷனராக ஷாஜிதா ஆகியோர் முக்கிய பதவிகளில் அங்கம் வகிக்கிறார்கள்.
சென்னை தலைமையக இணை கமிஷனராக சாமுண்டீஸ்வரியும், வட சென்னை இணை கமிஷனராக ரம்யா பாரதி, கிழக்கு இணை கமிஷனராக திஷா மிட்டல் ஆகியோர் உள்ளனர். சென்னை பெண் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தன்னந்தனியாக ரவுடியை பிடித்து சாதனை படைத்தவர். சமீபத்தில் பெண் சப்-இன்ஸ்பக்டர் மீனா, ரவுடியின் காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தார்.
முதல்-அமைச்சர் தலைமையில் விழா
இப்படி தமிழக காவல்துறையின் திரும்பிய திசை எல்லாம் பெண் போலீஸ் பணி தலை நிமிர்ந்து நிற்கிறது. முதல்-அமைச்சராக தந்தை கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்ட பெண் போலீசின் பொன் விழாவுக்கு தலைமை தாங்கி நடத்தும் பணியை அவரது மகன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) பெற்றுள்ளார்.
இன்று காலை 10 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இந்த பிரமாண்ட விழா நடைபெறுகிறது.
பெண் போலீசின் பொன் விழா முழுக்க, முழுக்க பெண் போலீசாரால்தான் நடத்தப்படுகிறது. குதிரைப்படை வீராங்கனைகள்தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை விழா நடக்கும் அரங்கத்துக்கு வரவேற்று அழைத்து வருகிறார்கள். மோட்டார் சைக்கிள் வீராங்கனைகளும் அணிவகுத்து வருவார்கள். அணிவகுப்பு மரியாதையும் பெண் போலீசாரால்தான் நடத்தப்படுகிறது.
சைக்கிள் பேரணி
விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண் போலீசின் சைக்கிள் பேரணியை தொடங்கி வைக்கிறார். விழாவையொட்டி சிறப்பு தபால் தலையையும் முதல்-அமைச்சர் வெளியிடுகிறார். இன்றைய விழாவில் பெண் போலீசை பெருமைப்படுத்தும் வகையில் மு.க.ஸ்டாலின் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விழாவையொட்டி நேற்று மாலை முதலே நிகழ்ச்சி ஒத்திகை, பாதுகாப்பு ஒத்திகை என்று நேரு உள் விளையாட்டரங்கம் பெண் போலீஸ் மயமாக காட்சி அளித்தது.
'தூணாக நின்று பெருமை சேர்க்கும் பெண் போலீஸ்'
பொன் விழா கொண்டாடும் பெண் போலீசாரின் பெருமைகள் குறித்து போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
தமிழக போலீஸ் துறையில் பெண் போலீசாரின் பங்களிப்பு முக்கியமானதாகவும், பெருமை சேர்ப்பதாகவும் உள்ளது. ஆரம்ப காலத்தில் பெண் குற்றவாளிகளை விசாரித்து கைது செய்வது, பொதுக்கூட்டங்களுக்கு பாதுகாப்பு அளிப்பது போன்ற ஒரு சில பணிகளில்தான் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அப்போது சட்டம் - ஒழுங்கை பராமரிப்பது, புலன் விசாரணை செய்வது போன்ற பணிகளில் பெண் போலீசார் ஈடுபடுத்தப்படவில்லை. தற்போது அனைத்து பிரிவுகளிலும் பெண் போலீசாரின் பணி முக்கியமானதாக உள்ளது. அவர்கள் தமிழக போலீஸ் துறைக்கு தூண் போன்று உள்ளார்கள்.
தமிழகத்தில் உள்ள 1,498 போலீஸ் நிலையங்களில் 503 போலீஸ் நிலையங்களுக்கு சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு பெண் இன்ஸ்பெக்டர்கள் தான் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதில் அவர்களது பணி சிறப்பாக உள்ளது.
தமிழகத்தில் 228 அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள் உள்ளன. அந்த போலீஸ் நிலையங்கள் மூலம் கடந்த ஆண்டு 75 ஆயிரத்து 600 பெண்களிடம் புகார் மனுக்கள் பெறப்பட்டு உரிய தீர்வு காணப்பட்டு உள்ளது. இதனை பெண் போலீசார்தான் சிறப்பாக கையாண்டு உள்ளனர். கம்ப்யூட்டர் பிரிவில் பெரும்பாலும் பெண் போலீசார்தான் பணியாற்றி வருகிறார்கள். எப்.ஐ.ஆர். போன்ற முக்கிய பணிகளை கம்ப்யூட்டரில் அவர்கள்தான் பதிவு செய்கிறார்கள்.
ஆக, சட்டம்-ஒழுங்கு பிரிவில் இருந்து முக்கியமான நிர்வாக பணிகளிலும் பெண் போலீசாரின் பங்களிப்பு சிறப்பாக உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.