தேங்காய் உற்பத்தியில் தமிழகம் 3-வது இடம்


தேங்காய் உற்பத்தியில் தமிழகம் 3-வது இடம்
x
தினத்தந்தி 2 Sept 2023 2:15 AM IST (Updated: 2 Sept 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் தேங்காய் உற்பத்தியில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது என்று தென்னை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

கோயம்புத்தூர்


பொள்ளாச்சி

இந்தியாவில் தேங்காய் உற்பத்தியில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது என்று தென்னை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பொள்ளாச்சி அருகே ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் சுரேஷ், சுதாலட்சுமி, லதா, தவபிரகாஷ், அருள்பிரகாஷ், மீனா ஆகியோர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தமிழகம் 3-வது இடம்

ஆண்டுதோறும் செப்டம்பர் 2-ந் தேதி உலக தென்னை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தென்னை தின விழா வளமான எதிர்காலத்திற்கும், வனப்பான வாழ்வுக்கும் தென்னை வளர்ப்பு என்ற மைய கருத்தின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது. தென்னை உற்பத்தியில் உலக அளவில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. தென்னையின் சராசரி உற்பத்தி திறன் ஹெக்டேருக்கு 8,983 தேங்காய்களாகும். மாநிலங்களை பொருத்தவரையில் தேங்காய் உற்பத்தியில் தமிழ்நாடு 3-வது இடத்தில் உள்ளது.

தமிழகத்தில் மொத்த தென்னை சாகுபடி பரப்பளவான 4 லட்சத்து 47 ஆயிரத்து 471 ஹெக்டேரில் கோவை மாவட்டத்தில் 88,467 ஹெக்டேர் பரப்பளவும், அடுத்தப்படியாக திருப்பூர் மாவட்டத்தில் 58,550 ஹெக்டேரும் உள்ளது. இந்தியாவில் 11 குட்டை ரகங்களும், 10 நாட்டு ரகங்களும், 20 வீரிய ஒட்டு ரகங்களும் உள்ளன. இதில் 16 ரகங்கள் இளநீர் தேவைக்கும், 35 ரகங்கள் கொப்பரை தேங்காய்க்கும், 6 ரகங்கள் இரு பயன்பாட்டிற்கும் ஏதுவாக விளங்குகிறது.

மதிப்பு கூட்டு பொருட்கள்

உலக அளவில் தென்னை 830 பூச்சிகள் மற்றும் சிலந்தி வகைகளாலும், 173 பூஞ்ஜை நோய்களாலும், 78 வகை நூற்புழுக்களாலும் பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளில் கூட சுருள் வெள்ளை ஈ என்ற சிறிய பூச்சி தென்னை சாகுபடியை கேள்விகுறியாக்கியது. இதை கட்டுப்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்.

தென்னையில் இருந்து நீரா, தேங்காய் பால், எண்ணெய் போன்ற மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. தென்னை சார் பொருட்களின் ஏற்றுமதி மூலம் நாட்டிற்கு ஆண்டிற்கு ரூ.3 ஆயிரம் மில்லியன் வருவாய் கிடைக்கிறது. ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தின் சேவைகளை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.



Next Story