உடல் உறுப்புகள் தானம் செய்வதில் தமிழகம் முதலிடம்
உலகிலேயே உடல் உறுப்புகள் தானம் செய்வதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
புதிய அரசு மருத்துவமனைகள்
புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில், புதிய துணை சுகாதார நிலைய கட்டிடங்கள், புறநோயாளிகள் பிரிவு கட்டிடத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார். அதன்பின் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
டெல்லியில் மருத்துவமனைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்ட போது அதுபோல தமிழகத்தில் 708 இடங்களில் அமைக்கப்படும் என அறிவித்தார். இதில் 500-க்கும் மேற்பட்ட மருத்துவமனைக்கான கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட பணியாளர்களை பணியமர்த்தும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் 15 நாட்களில் 500-க்கும் மேற்பட்ட புதிய அரசு மருத்துவமனைகள் திறக்கப்படும். இதில் 3 மருத்துவமனை புதுக்கோட்டையில் அமைய உள்ளது.
உடல் உறுப்பு தானத்தில் முதல் இடம்
தமிழகத்தில் சிசு மரணம் குறைந்து வருகிறது. உடல் உறுப்பு தான திட்டத்தை கடந்த 2007-2008-ம் ஆண்டில் கருணாநிதியால் கொண்டு வரப்பட்டது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 13 மருத்துவமனைகளில் மட்டுமே உடல் உறுப்பு தானம் பெறக்கூடிய நிலை இருந்தது. தி.மு.க. ஆட்சி வந்த பிறகு தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் உடல் உறுப்பு தானம் பெறக்கூடிய வகையில் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்படுகிறது. இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே உடல் உறுப்புகள் தானம் செய்வதில் தமிழகம் தான் முதல் இடத்தில் உள்ளது.
மருந்து தட்டுப்பாடு இல்லை
கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இல்லை. ஒமைக்ரானில் இருந்து உருவான புதிய வைரசால் இந்தியா முழுவதும் 11 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 500 நபர்கள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நான்கு அல்லது 5 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு மருத்துவர் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக்கொண்டாலே குணம் பெறலாம்.
அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு என்பது திட்டமிட்டு பரப்பப்படுகிற ஒரு வதந்தி. மருந்து தட்டுப்பாடு இருந்தால் 104 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
தர்பூசணி பழம்
தற்போது கோடை காலம் என்பதால் குழந்தைகள், முதியவர்கள் காலை 11 மணிக்கு மேல் மதியம் 3 மணி வரை வெளியில் வருவதை தவிர்க்கவும். வெயில் காலத்தில் ஏற்படுகின்ற நோய்களுக்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் இருந்தாலும், மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. வெயிலை சமாளிக்க மோர், இளநீர் குடிக்க வேண்டும். டீ, செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும். பழங்கள் பழுக்க வைப்பதில் ரசாயனம் தடவி பழுக்க வைப்பதை தடுக்க தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. மேலும் உணவு பாதுகாப்பு துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மாம்பழத்தை ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைப்பது, தர்பூசணி பழத்தை சிவப்பு நிறமாக மாற்ற ஊசி மூலம் ரசாயனம் ஏற்றுவது போன்றவை உடல் நலனுக்கு கேடு விளைவிக்க கூடியது. இதில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.