சோதனை சாவடிகளில் தமிழக வாகனங்கள் தடுத்து நிறுத்தம் பஸ்கள் ஓடாததால் பயணிகள் பரிதவிப்பு
சோதனை சாவடிகளில் தமிழக வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. பஸ்கள் ஓடாததால் பயணிகள் பரிதவித்தனா்.
மாநில, எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் தமிழக வாகனங்கள் தடுத்ததுநிறுத்தப்பட்டன. பஸ்கள் ஓடாததால் பயணிகள் பரிதவித்தனர்.
முழு அடைப்பு
காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின்படி காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலம் முழுவதும் ஒருநாள் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று கன்னட அமைப்புகள் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி கர்நாடக மாநிலத்தில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள கர்நாடக மாநில எல்லைகளில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. சோதனை சாவடிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
சோதனை சாவடியில் நிறுத்தம்
சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு செல்லக்கூடிய தமிழக பதிவு எண் கொண்ட லாரி, வேன்கள், மோட்டார் சைக்கிள்கள் என அனைத்து வாகனங்களையும் நேற்று முன்தினம் இரவில் இருந்தே பண்ணாரி சோதனை சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் வாகனங்களை ஒதுக்குபுறமாக நிறுத்துமாறு போலீசார் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தினர்.
சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலமான மைசூரு, பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு நேற்று பஸ்கள் இயக்கப்படவில்லை. தாளவாடி வரை மட்டுமே இயக்கப்பட்டன. அந்த பஸ்களும் தலமலை வழியாக தாளவாடிக்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயக்கப்பட்டது. இதனால் சத்தியமங்கலம் பஸ் நிலையமும் வெறிச்சோடி காணப்பட்டது.
பயணிகள் தவிப்பு
இதேபோல் கர்நாடக மாநிலத்திலும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக அங்கிருந்து சத்தியமங்கலத்துக்கு இயக்கப்படும் பஸ்களும் வரவில்லை. இரு மாநிலங்களுக்கும் இடையே போக்குவரத்து முடங்கியதால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர். குறிப்பாக குடும்பத்துடன் வந்திருந்தவர்கள், கைக்குழந்தைகளை வைத்திருந்தவர்கள் பஸ்கள் கிடைக்காமல் தவித்தனர்.
சத்தியமங்கலம் பஸ் நிலையம், பண்ணாரி சோதனை சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தமிழக-கர்நாடக எல்லை பகுதியான தாளவாடியை அடுத்த ராமாபுரம், கும்டாபுரம், பாரதிபுரம், எட்டுத்திகட்டை, அருள்வாடி, காரப்பள்ளம், கேர்மாளம் ஆகிய மாநில எல்லைகளில் போலீசார் குவிக்கப்பட்டனர். அங்கும் தமிழக பதிவுஎண் கொண்ட வாகனங்கள் காலை 6 மணி முதல் கர்நாடக மாநிலத்துக்குள் நுழைய போலீசார் தடை விதித்தனர்.
கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற பதிவு எண் கொண்ட சரக்கு வாகனங்கள் வழக்கம்போல சென்று வந்தன. கர்நாடக மாநிலம் காமராஜ் நகரத்தில் இருந்து தாளவாடிக்கு இயக்கப்பட்டு வந்த கர்நாடக அரசு பஸ்களும், தனியார் பஸ்களும் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் தாளவாடி பஸ் நிலையமும் வெறிச்சோடி காணப்பட்டது.
தமிழக-கர்நாடக எல்லை பகுதியான புளிஞ்சூரில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்ட கலெக்டர் ஷில்பா நாக், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்மினி சாகு ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அந்தியூர்
இதேபோல் அந்தியூரில் இருந்து கர்நாடக மாநிலங்களுக்கு செல்லக்கூடிய தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள் காலை 6 மணியில் இருந்தே வரட்டுப்பள்ளம் அணை சோதனை சாவடி பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டது. அங்கு அந்தியூர், பர்கூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள், ஆம்புலன்ஸ் மற்றும் ஆஸ்பத்திரிக்கு செல்லக்கூடிய அவசர கால வாகனங்களை மட்டும் செல்ல அனுமதித்தனர்.