உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை - அறிவிப்பு வெளியீடு
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை தரமணியில் இயங்கும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ் வளர்ச்சி இயக்குனர் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
"தமிழ்மொழி வளர்ச்சிக்கெனத் தமிழ்நாடு அரசால் தோற்றுவிக்கப்பட்ட உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன், ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டம் (எம்.ஏ. தமிழ்), தமிழ் முதுகலைப் பட்டப்படிப்பு மற்றும் தமிழ் முனைவர் பட்ட வகுப்பு (பிஎச்.டி.) ஆகியன இந்நிறுவனத்தில் ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப் பெற்று வருகிறது. 2024-25ம் கல்வியாண்டில் தற்போது ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்ட வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
தற்போது இரண்டாண்டு தமிழ் முதுகலைப் பட்டப்படிப்பு (இலக்கியத் துறை) மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. இவ்வகுப்பில் சேர்க்கைப்பெறும் மாணவர்களுள் தெரிவின் அடிப்படையில் 15 மாணவர்களுக்கு மட்டும் தமிழ்நாடு அரசு வழங்கும் ரூ.2,000/- கல்வி உதவித்தொகை திங்கள்தோறும் வழங்கப்படும்.
மேற்கண்ட இரண்டாண்டு தமிழ் முதுகலைப் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை (இலக்கியத் துறை) படிப்பில் பயில விரும்புவோர் சேர்க்கை தொடர்பான விதிமுறைகள், தகவல்கள் மற்றும் விண்ணப்பத்தை www.ulakaththamizh.in என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளலாம் அல்லது நேரில் பெற்றுக் கொள்ளலாம். இருபாலருக்கெனத் தனித்தனியே கட்டணம் இல்லா தங்கும் விடுதி வசதி உள்ளது.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இறுதியாக படித்த கல்விச் சான்று மற்றும் மாற்றுச்சான்றிதழ் (சான்றொப்பமிடப்பட்டது) நகலுடன் இணைத்து நேரில் அல்லது அஞ்சலில் இயக்குநர் (கூ.பொ.), உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை-600113 (தொலைபேசி 044-22542992) என்ற முகவரியில் 21.06.2024 வெள்ளிக்கிழமைக்குள் அளித்தல் வேண்டும். மேலும் தகவல் பெற மேற்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம் அல்லது நிறுவன வலைத்தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.