சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து


சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து
x
தினத்தந்தி 6 Dec 2022 12:15 AM IST (Updated: 6 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி அரசு பள்ளியில் சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடி மாணவ-மாணவிகள் அசத்தினர்.

நீலகிரி

ஊட்டி,

ஊட்டி அரசு பள்ளியில் சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடி மாணவ-மாணவிகள் அசத்தினர்.

சைகை மொழி

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் சார்பில், சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் நிகழ்ச்சி ஊட்டியில் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதனை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு கல்வி வழங்குவது அவசியம் குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஒருங்கிணைந்த கல்வி உள்ளடக்கிய கல்வி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களை கண்டறிந்து, பள்ளியில் சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த மாதம் 14-ந் தேதி முதல் கடந்த 3-ந் தேதி வரை நடந்தது.

பாராட்டு

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் சிறந்த கல்வியினை கற்று தருகின்றனர். எனவே, மாணவ-மாணவிகள கல்வி மற்றும் விளையாட்டில் கவனம் செலுத்தி உயர்ந்த நிலையை அடைய வேண்டும். மேலும், சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய மாணவ, மாணவிகளுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கு வண்ண பென்சில்களையும், மாநில அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 4 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.

இதில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் (ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை) பிரியா, நாகஜோதி, மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி, உதவி திட்ட அலுவலர் குமார், பள்ளி தலைமை ஆசிரியை கிறிஸ்டின் பியூலா, கைகை மொழி ஆசிரியர் சாந்தி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



Next Story