எளிதாக இருந்தது தமிழ்
எளிதாக இருந்தது தமிழ்
கோவை
கோவையில் பிளஸ்-1 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இதில் தமிழ் பாடத்தேர்வு மிகவும் எளிதாக இருந்ததாக மாணவ-மாணவிகள் தெரிவித்தனர்.
பிளஸ்-1 பொதுத்தேர்வு
தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வானது அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந் தேதி வரை நடக்கிறது. முதல் நாளான நேற்று தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடத்தேர்வு நடந்தது. அதன்படி கோவை மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு மொத்தம் 128 மையங்களில் நடந்தது. மாணவ-மாணவிகள் காலை 8 மணிக்கெல்லாம் தேர்வு மையத்துக்கு வந்து தயாராக இருந்தனர்.
பின்னர் காலை 9.45 மணிக்கு தேர்வு அறைக்குள் மாணவ-மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அந்தந்த மையங்களில் உள்ள தகவல் பலகையில் தேர்வு அறை எண், தேர்வர்கள் எண் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய நோட்டீசை பார்த்து விட்டு அறைகளுக்குள் சென்றனர்.
மாணவ-மாணவிகளின் உடமைகளை தீவிர சோதனை செய்த பின்னரே அறை கண்காணிப்பாளர்கள் உள்ளே செல்ல அனுமதித்தனர். பிளஸ்-1 தேர்வு காலை 10.15 மணிக்கு தொடங்கியது. இதையடுத்து மாணவ-மாணவிகள் தேர்வை ஆர்வமுடன் எழுதினர்.
33,960 போ் தேர்வு எழுதினர்
இந்த தேர்வை மாவட்டத்தில் 362 பள்ளிகளை சேர்ந்த 15,630 மாணவர்கள், 18,760 மாணவிகள் என மொத்தம் 34,390 மாணவ-மாணவிகள் எழுத இருந்தனர். அவர்களில் 33,960 போ் தேர்வு எழுதினர். 430 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வில் காப்பியடித்தல், ஆள்மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க 180 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருந்தன. அத்துடன் 128 முதன்மை கண்காணிப்பாளர்கள், 138 துறை அதிகாரிகள், 1,800 அறை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
6 தேர்வு மையங்களில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பூபதி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் தேர்வுகள் 1.15 மணிக்கு முடிந்தது. தேர்வை எழுதிவிட்டு மாணவ-மாணவிகள் உற்சாகமாக வெளியே வந்தனர். அவர்கள் இந்த தேர்வு மிகவும் எளிதாக இருந்ததாக தெரிவித்தனர்.
இதுகுறித்து மாணவ-மாணவிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
மிகவும் எளிதாக இருந்தது
துணி வணிகர் சங்க அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கே.சுபிக் ஷா (ம.நா.க.வீதி) :- பிளஸ்-1 பொதுத்தேர்வுக்கு 90 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. இந்த தேர்வு நான் எதிர்பார்த்ததை விட மிகவும் எளிதாக இருந்தது.
மாணவி விஷ்ணு பிரியா (தீத்திப்பாளையம்) :- பிளஸ்-1 பொதுத்தேர்வுக்காக நான் கடந்த ஒரு ஆண்டாக எதிர்பார்ப்போடு தயாராகி வந்தேன். தமிழ் பாடத்தேர்வில் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளும் மிகவும் எளிதாக இருந்தன. இதனால் என்னால் இந்த தேர்வை நன்றாக எழுத முடிந்தது. இதில் நான் 90 மதிப்பெண்களுக்கு 80 மதிப்பெண்களுக்கும் மேல் எடுப்பேன் என்று நம்புகிறேன்.
முக்கியமான தேர்வு
மாணவர் நவீன் (வைசியாள்வீதி) :- பிளஸ்-1 பொதுத்தேர்வை நான் மிகவும் முக்கியமாக கருதுகிறேன். ஏனென்றால் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் நான் அடுத்து பிளஸ்-2 பொதுத்தேர்வை எளிதாக எழுத முடியும். இல்லையென்றால் அடுத்த ஆண்டு தோல்வியடைந்த பாடங்களுக்கு மீண்டும் பிளஸ்-1 பொதுத்தேர்வை அரியர் தேர்வாக எழுத வேண்டி இருக்கும். இதனால் கவனத்துடன் படித்தேன். அதன்படி இதில் இடம் பிடித்த கேள்விகள் எளிதாக இருந்ததால் தேர்வையும் எளிதில் எழுதிவிட்டேன்.
மாணவர் முகமது இர்பான், (செல்வபுரம்) :- பிளஸ்-2 பொதுத்தேர்வில் ஒரு மதிப்பெண் வினாக்கள் மட்டும் சற்று கடினமாக இருந்ததாக எனது உறவினர் தெரிவித்து இருந்தார். இதனால் நான் பிளஸ்-1 பொதுத்தேர்விலும் தமிழ்ப்பாடத்தில் வினாக்கள் கடினமாக இருக்குமோ என்று கருதியவாறு தேர்வு அறைக்குள் சென்றேன். ஆனால் வினாத்தாளை பார்த்தபோது அனைத்து கேள்விகளும் படித்ததில் இருந்து இடம் பிடித்து இருந்தது.
துணி வணிகர் சங்க அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பூர்ணிமா :- நான் வாளையாறு பகுதியில்இருந்து வந்து படித்து வருகின்றேன். தேர்வுக்காக அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து சிறிது நேரம் படித்துவிட்டு காலை 6 மணிக்கு பஸ்சில் புறப்பட்டு தேர்வு அறைக்கு 8 மணிக்கு வந்தேன். தமிழ்பாடத்துக்கான தேர்வில் புத்தகத்தில் படித்து இருந்த வினாக்கள் இடம்பெற்று இருந்ததால் தேர்வு எளிமையாக இருந்தது.