தமிழக அரசு என்.எல்.சி.யை தடை செய்ய வேண்டும்


தமிழக அரசு என்.எல்.சி.யை தடை செய்ய வேண்டும்
x

மக்களின் நலன் கருதி தமிழக அரசு என்.எல்.சி. நிறுவனத்தை தடை செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அரியலூர்

பேட்டி

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே பெரியதத்தூர் கிராமத்தில் மாநில வன்னியர் சங்க செயலாளர் வைத்தி-ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் தேன்மொழி வைத்தி தம்பதியின் இல்ல புதுமனை புகுவிழாவில் கலந்து கொண்ட பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தி.மு.க. அரசு நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகத்திற்கு அடிமையாக இருக்கிறது. உண்மையான மக்கள் நலன் சார்ந்த அரசாக இருந்தால் என்.எல்.சி.யை தமிழக அரசு தடை செய்து இருக்க வேண்டும். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு வேலை கொடுப்பது மற்றும் ஏகப்பட்ட ஊழல் என்.எல்.சி.யில் நடந்து கொண்டிருக்கிறது. பா.ம.க. வன்முறை கட்சி என்ற தோற்றத்தை உருவாக்கி கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் போட்ட வழக்கை திரும்ப பெறவில்லை என்றால் கலைஞருக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க இடம் கிடைத்து இருக்காது. கடந்த 2006-ம் ஆண்டு மைனாரிட்டி அரசாக இருந்த தி.மு.க. முழுமையாக 5 ஆண்டுகள் ஆட்சி நடத்த பா.ம.க. தான் காரணம்.

சுங்க கட்டணம் உயர்வு

நெல் ஒரு குவிண்டாலுக்கு ரூ.7 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது மிக குறைவான தொகையாகும். எனவே கூடுதலாக குவிண்டாலுக்கு ரூ.500 வழங்க வேண்டும். மேலும் குறுவை பயிர்கள் கருகும் சூழ்நிலை உள்ளதால் உச்சநீதிமன்றம் சென்று காவிரியில் தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் 23 சுங்கச் சாவடிகளில் ரூ.5 முதல் ரூ.150 வரை கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சுங்கச்சாவடி வசூலில் மிகப்பெரிய ஊழல் நடந்து இருக்கிறது. இதற்கு சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் சோழர் பாசன திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு வர வேண்டும் என்றார்.

பெட்ரோல், டீசல் விலையையும்...

தொடர்ந்து கியாஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு குறைத்து உள்ளது குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அன்புமணி ராமதாஸ் பதில் அளித்து பேசுகையில், எண்ணெய் நிறுவனங்கள் கொள்ளை லாபத்தில் இயங்குகிறது. கியாஸ் சிலிண்டர் விலையை எப்போதோ குறைத்து இருக்க வேண்டும். ரூ.200 அல்ல ரூ.500 குறைக்க வேண்டும். இதுபோல் பெட்ரோல், டீசல் விலையையும் குறைக்க வேண்டும் என்றார். தொடர்ந்து சி.ஏ.ஜி. அறிக்கை குறித்து கேட்டபோது, முழுமையான விவரங்கள் தெரிந்துகொண்டு தங்களுக்கு தெரிவிக்கிறேன் என்றார்.

மேலும் சட்டம்- ஒழுங்கு பற்றி கேட்டபோது, கஞ்சா விற்று தமிழகத்தில் போலீசாரை தாக்கும் நிலைக்கு சென்று விட்டது. போலீசாருக்கு தெரியாமல் யாரும் கஞ்சா விற்க முடியாது. எனவே சில போலீசாரை பணி நீக்கம் செய்ய வேண்டும். போதை ஒழிப்பு பிரிவுத்துறைக்கு போலீசாரை நியமனம் செய்ய வேண்டும். கஞ்சா விவகாரத்தில் முதல்-அமைச்சர் போதுமான கவனத்தை செலுத்தவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

அப்போது பா.ம.க. வழக்கறிஞரும், சமூக நீதிப்பேரவை தலைவருமான வக்கீல் பாலு, முன்னாள் ரெயில்வே துறை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, அரியலூர் மாவட்ட செயலாளர் காடுவெட்டி தனி வீடு ரவி (என்கிற) ரவிசங்கர், பா.ம.க. பொருளாளர் திலகபாமா, எம்.எல்.ஏ.க்கள் அருள், சிவக்குமார், சதாசிவம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். புதுமனை புகுவிழாவில் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் செந்தில்குமார், அரியலூர் மாவட்ட தலைவர் அசோகன், பெரம்பலூர் மாவட்ட தலைவர் மதுரா செல்வராஜ், ஒருங்கிணைந்த பெரம்பலூர்- அரியலூர் மாவட்ட அமைப்பு செயலாளர் கோவிந்தராஜ், வன்னியர் கல்வி வளர்ச்சி குழு வழக்கறிஞர் திருமாவளவன், மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் தர்ம பிரகாஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் சின்னப்பிள்ளை, மாநில செயற்குழு உறுப்பினர் குமார், மாவட்ட பாட்டாளி தொழிற்சங்க தலைவர் ராமதாஸ், மாவட்ட அமைப்பு செயலாளர் படைநிலை செந்தில், முன்னாள் ஒன்றிய செயலாளர் ராசு, ஜெயங்கொண்டம் நகர செயலாளர் பரசுராமன் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், பல்வேறு கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், வர்த்தகர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story