தமிழ்நாடு பதிவுத்துறை மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது :பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேட்டி
தமிழ்நாடு பதிவுத்துறை மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது என்று பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறினார்.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்திலேயே இணை சார்பதிவாளர் அலுவலகம் எண்-1 செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று காலை பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், விழுப்புரம் மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு திடீரென வருகை தந்தார். அவர், மாவட்ட பதிவாளர் அலுவலகம் மற்றும் இணை சார்பதிவாளர் அலுவலகம் எண் 1-ல் உள்ள முக்கிய கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முறையான நடவடிக்கை
ஆய்வுப்பணியை முடித்துக்கொண்டு வெளியே வந்த பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இது வழக்கமாக நடைபெறுகிற ஆய்வுதான். மாவட்டந்தோறும் பதிவாளர் அலுவலகங்களுக்கு சென்று இதுபோன்ற ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். களப்பணி தேவை என குறிப்பிடப்பட்ட பத்திரத்துக்கு களப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதா, அதற்கான புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. போலியான ஆவணங்கள், முறைகேடான ஆவணங்களை கொண்டு பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை ரத்து செய்யும் அதிகாரம் அந்தந்த மாவட்ட பதிவாளருக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் போலியாக, முறைகேடான ஆவணங்களை ரத்து செய்யும் நிலை உருவான நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இந்த வழக்கு விசாரணை முடிந்த பின்னர், முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
100 சதவீதம் வெளிப்படைத்தன்மை
தமிழ்நாடு பதிவுத்துறையை பொறுத்தவரை மற்ற மாநிலங்களுக்கெல்லாம் ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறது. தமிழகத்தில் எந்தவொரு ஆவணத்தையும் பதிவு செய்யும்போது சம்பந்தப்பட்டவரின் ஆதார் அட்டையை கொண்டு சரிபார்த்த பின்னரே பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. தமிழ்நாட்டை பின்பற்றி மற்ற மாநிலங்கள் தற்போதுதான் ஆதார் அட்டையை கொண்டு பதிவு செய்யும் நடைமுறையை தொடங்கியுள்ளனர்.
இணையவழியில் பத்திரப்பதிவு முறையை கொண்டு வந்ததற்கு காரணம் முறையற்ற பதிவுகளை, தவறான பதிவுகளை தடுப்பதற்காகத்தான். 100 சதவீதம் வெளிப்படைத்தன்மை, நேர்மையான நிர்வாகம் வேண்டும் என்பதே இத்துறையின் நோக்கம். அதற்கேற்ப அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் காலிமனை இடங்களை பதிவு செய்யும் போது அந்த இடத்தை புகைப்படம் எடுத்து பத்திரப்பதிவின்போது அதனை கொடுக்க வேண்டும் என அறிவித்து இந்த நடைமுறையை அக்டோபர் 1-ந் தேதி முதல் அமல்படுத்தியுள்ளோம். தற்போது செல்போன் மூலமாகவும் காலிமனை இடங்களை புகைப்படம் எடுத்து பத்திரப்பதிவின்போது அளிக்கலாம் என கூறியுள்ளோம். இதன் மூலம் காலிமனையின் தற்போதைய நிலை தெரிந்து விடுவதோடு மட்டுமின்றி முறையற்ற, தவறான ஆவணப்பதிவு செய்வது முற்றிலும் தடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது கடலூர் மண்டல துணை பதிவுத்துறை தலைவர் ஜனார்த்தனம், மாவட்ட பதிவாளர்கள் புவனேஸ்வரி (நிர்வாகம்), விஜயலட்சுமி (தணிக்கை) உள்பட பலர் உடனிருந்தனர்.