தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக மாணவர் சாவு
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக மாணவர் சாவு
வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணி கடலில் மூழ்கி தஞ்சை தமி்ழ்ப்பல்கலைக்கழக மாணவர் பரிதாபமாக இறந்தார்.
சுற்றுலா வந்தனர்
கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் செல்வம் மகன் முகுந்தன்(வயது 21). இவர் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்்கழகத்தில் படித்து வந்தார்.
கடந்த 26-ந் தேதி முகுந்தன் தனது நண்பர்களான தஞ்சை செங்கிப்பட்டியை சேர்ந்த ராஜஸ்ரீ(20), வேதாரண்யம் தேத்தாக்குடி வடக்கு பகுதியை சேர்ந்த அபிஷேக்(20), கும்பகோணம் ஏரகரம் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (24), நீடாமங்கலம் கிளேரியம் பகுதியை சேர்ந்த தினகரன்(19), பட்டுக்கோட்டை பண்ணைவயல் பகுதியை சேர்ந்த சுதர்சன்(20), விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்த பாண்டியம்மாள்(20), புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்த அனுசுயா(20) ஆகியோருடன் கல்லூரி விடுமுறையில் தஞ்சையில் இருந்து வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தார்.
கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டார்
பின்னர் அங்கு உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து அனைவரும் தங்கினர். நேற்று முன்தினம் வேளாங்கண்ணி கடலில் 8 பேரும் குளித்தனர். அப்போது முகுந்தன், ராஜஸ்ரீ ஆகிய இருவரும் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டனர். உடனே அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டனர்.
சத்தம் கேட்டு கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் அங்கு விரைந்து வந்து ராஜஸ்ரீயை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
உடல் கரை ஒதுங்கியது
இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர காவல்படை போலீசார் மற்றும் மீனவர்கள் கடலில் இறங்கி முகுந்தனை தேடினர். ஆனால் சிறிது நேரத்தில் முகுந்தன் பிணமாக கரை ஒதுங்கினார். இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வேளாங்கண்ணி கடலோர காவல் படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேளாங்கண்ணி கடலில் மூழ்கி தமிழ்ப்பல்கலைக்கழக மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.