கன்டெய்னர் லாரி மீது டேங்கர் லாரி மோதல்


கன்டெய்னர் லாரி மீது டேங்கர் லாரி மோதல்
x
தினத்தந்தி 18 March 2023 6:45 PM GMT (Updated: 2023-03-19T00:15:18+05:30)

உளுந்தூர்பேட்டையில் கன்டெய்னர் லாரி மீது டேங்கர் லாரி மோதியதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை,

கேரளாவில் இருந்து சென்னை நோக்கி கன்டெய்னர் லாரி ஒன்று புறப்பட்டு சென்றது. உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டை புறவழிச் சாலையில் வந்தபோது, கன்டெய்னர் லாரியை அதன் டிரைவர் அங்கு சாலையோரமாக நிறுத்திவிட்டு சென்றார். இந்த நிலையில் பின்னால் தார் லோடு ஏற்றிக்கொண்டு வந்த டேங்கர் லாரி ஒன்று எதிர்பாராத விதமாக சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த கன்டெய்னர் லாரி மீது மோதியது. இந்த விபத்தில் டேங்கர் லாரியின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இதில் டேங்கர் லாரி டிரைவரான திருச்சி அருகே முசிறி பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் (45) என்பவர் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடினார். இது குறித்த தகவலின் பேரில் உளுந்தூர்பேட்டை தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்தால் உளுந்தூர்பேட்டை -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்தனர். இதையடுத்து எலவனாசூர்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர். தொடர்ந்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story