ரூ.1 கோடி டாப்செட்கோ கடன் வழங்க இலக்கு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.1 கோடி டாப்செட்கோ கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளதாக பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழக தலைவர் காஜா மைதீன் தெரிவித்தார்.
கலந்தாய்வு கூட்டம்
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், கடனுதவிகள் வழங்கும் மத்திய கூட்டுறவு வங்கி செயலாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழக தலைவர் காஜா மைதீன் தலைமை தாங்கினார். கலெக்டர் வளர்மதி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் காஜாமைதீன் பேசியதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சரின் தலைமையிலான அரசின் மூலமாக பிற்படுத்தப்பட்டோருக்கு பொருளாதார முன்னேற்றத்திற்காக குறைந்த வட்டி வீதத்தில் வங்கிக் கடனுதவிகள் வழங்கப்படுகிறது. அதனை பெற பயனாளிகள் வரும் போது அவர்களை துறைச்சார்ந்த அலுவலர்கள் அலைகழிக்கக் கூடாது. உங்கள் குடும்பத்தில் ஒருவரை போன்று பயனாளிகளை நடத்த வேண்டும்.
ரூ.1 கோடி இலக்கு
தற்போது 2023-2024-ம் நிதியாண்டிற்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாப்செட்கோ கடன் வழங்க ரூ.1 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து அவர் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் கூட்டுறவு வங்கிகளில் சிறு வணிகக் கடன் பெற்று தொழில் செய்து வரும் சோளிங்கர் வட்டம் பெருங்காஞ்சி, கொடைக்கல் ஊராட்சி கன்னிகாபுரம் கிராமத்தில் மகளிர் சுய உதவி குழுக்களை சந்தித்து கேட்டறிந்தார்.
கூட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் கோமதி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டுக் கழக பொது மேலாளர் லதா, நிதி ஆலோசகர் மற்றும் நிறுவனச் செயலர் சங்கர குமார், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முரளி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.