20 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு-வன அலுவலர் சிறப்பு பேட்டி
திருச்சி மாவட்டத்தில் 20 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட வன அலுவலர் கிரண் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் 20 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட வன அலுவலர் கிரண் தெரிவித்துள்ளார்.
33 சதவீதமாக உயர்த்த...
சென்னையில் சமீபத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட வன அலுவலர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் காடுகளின் பரப்பளவு 23.5 சதவீதமாக இருக்கிறது. இந்த பரப்பளவை 33 சதவீதமாக உயர்த்த வேண்டும். 10 ஆண்டுகளில் 33 சதவீதமாக உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். காடுகளின் பரப்பளவை கூட்டுவதற்கு அந்தந்த மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என முதல்-அமைச்சர் தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் திருச்சி மாவட்ட வன அலுவலர் கிரண் கலந்து கொண்டார். மாநாட்டில் முதல்-அமைச்சர் தெரிவித்த கருத்துகள் குறித்து தினத்தந்திக்கு கிரண் சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- நடப்பு ஆண்டில் திருச்சி மாவட்டத்தில் எத்தனை லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது?
பதில்:- கடந்த ஆண்டு 3 லட்சத்து 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. 2023-2024-ம் ஆண்டில் 20 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை கண்காணிக்க தனி குழு அமைக்கப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகிறோம். இதில் வனத்துறை மட்டுமில்லாமல் மற்ற அனைத்து துறைகளையும் சேர்த்து மரக்கன்றுகள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வன பரப்பளவு
கேள்வி:- திருச்சி மாவட்டத்தில் எத்தனை சதவீதம் வன பரப்பளவு உள்ளது?
பதில்: திருச்சி மாவட்டத்தின் மொத்த வன பரப்பளவு 44 லட்சத்து 4 ஆயிரம் எக்டேர் ஆகும். இதில் காடுகள் 46 ஆயிரத்து 306 எக்டேர் பரப்பளவு இருக்கிறது. மரங்களின் பரப்பளவு மற்றும் தனியார் நிலங்களில் உள்ள மரங்களையும் சேர்த்து 10 சதவீதம் பரப்பளவு இருக்கிறது. முதல்-அமைச்சரின் திட்டம் என்னவென்றால், தமிழகத்தில் 33 சதவீதம் வன பரப்பளவு இருப்பதுபோல், அந்தந்த மாவட்டத்திலும் தன்னிறைவு பெற்றிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தற்போது திருச்சி மாவட்டத்தில் 10 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக உயர்த்த வேண்டும். எந்தெந்த மாவட்டங்களில் வன பரப்பளவு குறைவாக இருக்கிறதோ, அந்தந்த மாவட்டங்களில் அதிகப்படியான மரக்கன்றுகளை நட வேண்டும் என கூறியுள்ளனர். அதற்குதான் நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்.
அடர்ந்த காடுகள்
கேள்வி: திருச்சி மாவட்டத்தில் வன பரப்பளவு குறைந்துள்ளதா?
பதில்: தமிழ்நாட்டின் மொத்த மழையளவு சராசரியாக 900 மில்லி மீட்டர் முதல் 1000 மில்லி மீட்டர் வரை உள்ளது. ஆனால் திருச்சி மாவட்டத்தின் மழையளவு சராசரியாக 788 மில்லி மீட்டராக உள்ளது. மழையளவு குறைந்தால் மரக்கன்றுகள் நடும் போது அதனை பராமரிக்க தண்ணீர் ஊற்றும் பிரச்சினைகள் அதிகளவில் ஏற்படுகிறது. திருச்சி மாவட்டத்தை பொறுத்த வரை வடகிழக்கு பருவ மழை காலங்களில் 80 சதவீதம் மழை பொழிவு இருக்கும். இந்த பருவ காலம் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக குழிபறித்துவிட்டு, மழை பெய்யும்போது, மரக்கன்றுகள் நடப்படும். இது கன்றுகள் வளருவதற்கு ஏதுவாக இருக்கும்.
திருச்சி மாவட்டத்தில் அடர்ந்த காடுகள் பச்சைமலை பகுதியில் உள்ளது. மேலும் காடுகளில் உள்ள சம வெளி பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் திருச்சி மாவட்டத்தில் வன பரப்பளவு குறையவில்லை என்றே கூறலாம். மாநகர் பகுதிகளில் அனைத்து துறையை சேர்ந்த ஊழியர்களும் ஒரு மரக்கன்று நட வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
27 ஆயிரம் மரக்கன்றுகள்
கேள்வி:- மரங்கள் வளர்ப்பதில் என்னென்ன பிரச்சினைகள் உள்ளது?
பதில்:- தற்போது காப்பு காடுகளில் 90 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. இதில் 60 முதல் 70 சதவீத பணிகள் வரை முடிக்கப்பட்டுள்ளது. மற்ற மரக்கன்றுகள் நடுவதற்கான குழிகள் உள்ளிட்ட பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. நபார்டு திட்டத்தில் 30 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. தனியார் விவசாய நிலங்களில் நடுவதற்கு 2 லட்சத்து 9 ஆயிரம் மரக்கன்றுகள் தயாராக உள்ளன. இதில் 1 லட்சத்து 95 ஆயிரம் விவசாய நிலங்களுக்கும், மாநகராட்சி பகுதியில் 14 ஆயிரம் மரக்கன்றுகளும் நடப்பட உள்ளது. திருச்சி மாவட்டத்தில் 20 லட்சம் மரக்கன்றுகள் நட தயாராக உள்ளோம். சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடுவது என்பது ஒவ்வொரு துறையிலும் செய்து வருகிறார்கள். இந்தாண்டு வனத்துறை சார்பில் தேசிய நெடுஞ்சாலைகளில் செய்து வருகிறோம். சாலைகளில் மரக்கன்றுகள் நடுவது பிரச்சினை இல்லை. பராமரிப்பது தான் பிரச்சினை. வனத்துறையை பொறுத்தவரை நாற்றுகளை உருவாக்கி நட்டு வைப்பதற்கு அரசு நிதி வழங்குகிறது. இதனால் மற்ற துறைகள், தனியார் அமைப்புகள் இந்த பணியை செய்தால் நன்றாக இருக்கும். மரங்களை பாதுகாப்பதற்கு தனியார் அமைப்புகளுக்கு பெரியளவில் உதவி செய்தால் சிறப்பாக செயல்பட முடியும். திருச்சி நெடுஞ்சாலையில் 27 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு தயாராக உள்ளோம். மணப்பாறையில் இருந்து திருச்சி உள்ளிட்ட 3 நெடுஞ்சாலை பகுதிகளில் அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்கு வேலி வைத்து, தண்ணீர் ஊற்றி பராமரித்தால் போதும். மரங்கள் வளர்ப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை.
மலைவேம்பு
கேள்வி:- எந்த வகையான மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன?
பதில்:- தனியார் விவசாய நிலத்திற்கு நடுவதற்கு தேக்கு, மகாகனி, வேம்பு, மலைவேம்பு, செம்மரம், பூவரசம் உள்ளிட்ட மரக்கன்றுகள் வளர்த்து கொடுத்துள்ளோம். பொது இடத்தில் நடுவதற்கு வேம்பு, புங்கன், செண்பகம், மகிலம், நாகலிங்கம் உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடுகிறோம். வன பரப்பில் நடுவதற்கு 30-க்கும் மேற்பட்ட வகையான மரக்கன்றுகளும் நடுகின்றோம். இதுபோன்று மூலிகை மரங்கள், மூலிகை தாவரங்கள், மூலிகை செடிகள் என 300 வகையான மரக்கன்றுகள் உருவாக்கியுள்ளோம். இதில் ஸ்ரீரங்கம் மேலூர் வண்ணத்து பூச்சி பூங்காவில் ராசி, நட்சத்திரம், ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் 4 பாதங்கள் என ஒவ்வொரு பாதத்திற்கும் ஒவ்வொரு மரம் இருக்கிறது. கிட்டதட்ட 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் உருவாக்கியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.