15 கோடி கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க இலக்கு


15 கோடி கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க இலக்கு
x

தமிழகம் முழுவதும் 15 கோடி கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக கூடுதல் முதன்மை செயலாளர் தென்காசி ஜவகர் பேசினார்.

திண்டுக்கல்

கால்நடை மருத்துவர்கள்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கால்நடை உதவி மருத்துவர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. இதற்கு கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன் வளத்துறை கூடுதல் முதன்மை செயலாளர் தென்காசி ஜவகர் தலைமை தாங்கினார். கலெக்டர் விசாகன், கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், தமிழ்நாடு கால்நடை மருத்துவ பேரவை தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கூடுதல் முதன்மை செயலாளர் தென்காசி ஜவகர் பேசியதாவது:-

இந்தியாவில் கால்நடை வளர்ப்பில் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழகத்தில் ஒரு கோடி அளவில் பசு, எருமை, குதிரை போன்ற பெரிய கால்நடைகளும், சுமார் 1½ கோடி அளவில் ஆடு, பன்றி, முயல் உள்ளிட்ட சிறிய கால்நடைகளும், 12 கோடி கோழிகளும் வளர்க்கப்படுகின்றன. மேலும் கால்நடைகளை நம்பி 4½ கோடி விவசாயிகள் வாழ்கின்றனர்.

இந்த கால்நடைகள் வளர்ப்பின் மூலம் விவசாயிகளுக்கு 44 சதவீத வருமானம் கிடைக்கிறது. இதன்மூலம் கால்நடை பராமரிப்பு துறையின் முக்கியத்துவத்தை அறியலாம். தமிழகம் முழுவதும் 15 கோடி கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதே நமது இலக்காகும். கால்நடை மருத்துவர்கள் எப்போதும் பணியிடத்தில் இருக்க வேண்டும். கால்நடை வளர்ப்போரிடம் நல்ல தொடர்பில் இருப்பது அவசியம். கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதை பெருமையாக கருத வேண்டும்.

இழப்பு ஏற்படக்கூடாது

கால்நடை வளர்ப்பு தொழிலால் தான், நாம் பணியாற்றுகிறோம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். ஏழைகளுக்கு இழப்பு ஏற்படாத வகையில் கால்நடை வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கால்நடை நிலையங்களுக்கு புதிய கருவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் கால்நடை பராமரிப்பு, பால்வளத்தில் முதலிடம் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் கூடுதல் கலெக்டர்கள் சரவணக்குமார் (மதுரை), பாலசந்தர் (சேலம்), கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் முருகன், துணை இயக்குனர் விஜயகுமார், பால்வளம் துணை பொதுமேலாளர் பாலபூபதி, உதவி இயக்குனர்கள் திருவள்ளுவன், பிரபு மற்றும் கால்நடை மருத்துவர்கள், உதவி மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story